பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அவமானமா? அஞ்சாதே!



அந்த நிகழ்ச்சியை இப்பொழுதும் இப்படித்தான் நினைத்துப் பார்க்கிறேன். 18 வயது இளைஞன். திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவன். விளையாட்டில் வேகம் மட்டும் அல்ல. வெறியும் நிறைந்தவன். உண்பது, உறங்குவது; கல்லூரி வகுப்பில் இருக்கும் நேரம் தவிர, ஆடுகளம் ஏதாவது ஒன்றில் விளையாடிக் கொண்டு இருப்பதையே வாழ்க்கையில் சுகம் என்று நினைப்பவன். அப்படியே விளையாடி ஆனந்தம் கொள்பவன். அதிலும் கைப்பந்து விளையட்டு என்றால், அவனுக்கு அத்தனை பிரியம்.

பள்ளியில் பத்தாவது படித்தபோது தனது பள்ளி கைப்பந்துக் குழுவில் விளையாடி மாவட்ட அளவில் வெற்றி பெற்றவன். அந்த மாவட்டத்தில் எந்த ஊரில் போட்டிகள் நடந்தாலும், அதில் கலந்து கொண்டு நல்ல விளையாட்டு வீரன் என்ற மதிப்பையும் பெற்றவன்.

அவன்தான், தன் கல்லூரி கைப்பந்து அணியில் சேர்ந்து, கல்லூரிக்காக விளையாட வேண்டுமென்று விரும்புகிறான். அந்தக் கைப்பந்துக் குழுவில் சேர்வதையே கெளரவம் என்று கருதுகிறான்.

அந்தக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் திரு. எஸ். தியாகராஜன் அவர்கள். அந்த நாளில் அவர் சொல்லுக்கு அந்தக் கல்லூரியே ஆமாம் போடும். கேட்டது கிடைக்கும். முதல்வர் அவர்களோ அவர் பேச்சை முக்கியம் என்று கேட்பார். அவருக்கு அவ்வளவு புகழ், மரியாதை

ஏனென்றால், திருச்சி ஜமால் முகமது கல்லூரி என்றாலே விளையாட்டுக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு கல்லூரி என்ற பெயரை, மாநில அளவிலே ஏற்படுத்தி வைத்தவர். அவரது பேச்சு இளைஞர்களைக் காந்தமாகக் கவரும் அவர் பேச்சு மகுடியாக முழங்கும். மயங்கிப் பின் செல்லாத விளையாட்டு வீரர்களே அந்த நாளில் இல்லை.