பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

23


போய் விடுவோரும் உண்டு. சொல்லிக் கொண்டு போகுவோர் மிகவும் குறைவுதான்.

இந்த பயங்கரப் பயிற்சிகளைத் தவிர்ப்பதற்காக, கல்லூரி முதல்வர் டாக்டர் ராப்சன் அவர்களிடம் ஒரு பத்து நாள் பர்மிஷன் கேட்டு வாங்கியிருந்தேன். என்னிடம் மிகவும் பரிவும் பாசமும் கொண்டிருந்ததுடன், என்னுடைய விளையாட்டுத் திறமைகளையும் தெரிந்து வைத்திருந்ததால், ஸ்பெஷல் கேஸ் என்று சொல்லி அனுமதி அளித்திருந்தார். இதுவரை எந்தத் தவறும் நேர்ந்திடவில்லை.

ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் முடிந்தபின், எல்லோரும் ஒரிடத்தில் கூடும்போது முதல்வர் அவர்கள், தேவையான அறிவிப்புகளை வெளியிடுவார். அப்படி பேசுகிறபொழுது, நவராஜ் செல்லையா, என்ற யூனிவர்சிட்டி ஸ்போர்ட்ஸ்மேன், சிறந்த விளையாட்டு வீரன் நமது கல்லூரிக்கு வரப்போகிறான் என்றெல்லாம் சொல்லுவாராம்.

இப்படி என்னை புகழ்ந்து பேசுகிற பொழுது, அதை கேட்கும் மாணவர்களில் பலர் யார் இது? என்று முதலில் யோசிக்கத் தொடங்கி; யாரடா இவன்? என்று பெரிய வார்த்தைகள் போட்டு பேசும் அளவுக்குப் போய்விட்டனர்.

முதலில் அலட்சியமாகத் தெரிந்த என் பெயர். அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளையே தகர்க்கும்படி ஆனதாக, அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். என்னைப் பார்க்காமலேயே அவர்களிடம் பொறாமையானது புயலாக வீசத் தொடங்கியது.

நம்மை விட அவன் பெரிய ஆளா? சிறந்த விளையாட்டு வீரனா? அவர்கள் உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு, என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் கல்லூரிக்குப் போய் சேர்வதற்காக, காரைக்குடிக்கு வந்தேன்.

என்னை வரவேற்பதற்காக எனது நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். என் நண்பர்களும் என்னைப் பற்றி, புகழ்ந்து அவர்களிடம் பேசியிருந்ததும், எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியிருந்திருக்கிறது. நான் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் என்னை வரவேற்ற என் நண்பர்களைப்