பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

29


கவிதை நன்றாக இருக்கிறது என்றார். கூச்சப்பட்டபடி நெளிந்து கொண்டேன்.

என் சீனியர் என்னைப் பார்த்து பாராட்டுவது போல புன்சிரிப்பை வழங்கினார்.

அடுத்து வந்த அந்த தமிழ்த்துறை தலைவரின் வார்த்தைகள், என்னை அவமான அக்னியில் அடித்துத் தள்ளியது போல வந்தன.

இந்தக் கவிதையை உங்களுக்கு யார் எழுதித் தந்தது? இந்த ஒரு வாக்கியம்தான் என் உள்ளத்திலே இருந்த, இளமை வேகம் நிறைந்த தன்மான உணர்ச்சியை, சிண்டைப் பிடித்து வெளியே இழுத்து வந்தது, சீண்டி விட்டது.

என் எழுத்துக்கு ஏளனமா? எனக்கு இந்த அவமானமா? எழுந்து நின்றேன். என்ன பேசினேன் என்று தெரியாமல் பேச ஆரம்பித்தேன். கல்லா இளமையின் கூக்குரல் அது.

உமக்கு கவிதை எழுதத் தெரியவில்லை என்றால் என்னைக் கேளுங்கள் கற்றுத் தருகிறேன். யார் உனக்கு இந்தக் கவிதையை எழுதித் தந்தது என்று கேட்க, உமக்கு என்ன அருகதை இருக்கிறது என்று பலப்பல கேள்விகள் புயலாய் பேசித் தள்ளிவிட்டேன்.

என்னை சமாதானப்படுத்தி வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் என் சீனியர். பெரிய சண்டையில் முடிய இருந்த அந்த நிகழ்ச்சி, பெரியவர்கள் தலையீட்டின் காரணமாக, அமைதியாக முடிந்துவிட்டது.

பிறகுதான் அந்தப் பேராசிரியரது பேச்சின் அர்த்தம் புரிந்தது. அதை அவரே சொல்லி அனுப்பிய பிறகுதான் தெரிந்தது.

உடற்கல்வித் துறையில் உள்ள ஒருவர், பி.ஏவில் பொருளாதாரம் படித்த ஒருவர், இப்படிப்பட்ட கவிதையை எழுத முடியுமா என்ற சந்தேகத்தைத்தான் நான் கேட்டேன். கேட்ட விதம் சரியில்லைதான். அந்த இளைஞரின் வேகமும் நியாயம்தான். அவரது மனதைப் புண்படுத்தியதற்காக வருந்துகிறேன் என்பதுதான் அந்தத் தமிழறிஞரின் பதிலாக தூது வந்தது.