பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவமானமா?அஞ்சாதே



எழுதத் தெரிந்தவனுக்கு என்ன வியாபாரம் பிடிக்கும்? அதுவும் ஒழுங்காக வாழ வேண்டும் என்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டு, இரவு பகல் சிந்தித்து எழுதிச் கொண்டிருக்கிற எனக்கு, என்ன வியாபாரம் பிடிக்கும்?

நூறு புத்தகங்கள் எழுதி ஆக வேண்டும் என்ற வெறி பிடித்து வாழும் எனக்கு பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று முயல் வேகத்தில் தொடங்கிய ஆர்வம், மாட்டு வேகத்தில் நடந்தது. மாட்டை இழுத்தால்தான் வரும். இழுக்கும்போதே பின்னால் போகும். விட்டால் வேறுபக்கம் போகும் மிரளும்.

இப்படி செப்படி வித்தை போட்ட வியாபாரத்தை வீட்டுக்குள்ளே வைத்துக் கொண்டு ஆபிசுக்கும் வியாபாரத்திற்கும் அலைந்து திரிந்து அல்லாடிக் கொண்டிருந்த போதுதான், அந்த அவமானம் எனக்கு ஏற்பட்டது.

வீட்டிற்கு முன்புறம் உள்ள செருப்புக் கடையை ஒட்டி ஒரு தந்திக் கம்பம். அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு எண்ணம். ஒரு ஆசை. அபிலாஷைதான்.

இரவு பத்துமணிக்கு மேலாக, ராஜ்மோகன் பதிப்பகம் என்று ஒரு 2 அடி நீளம், 6 அங்குல அகலம் உள்ள ஒரு அட்டையில் எழுதி, பார்ப்பவர்களுக்குத் தெரிகிற உயரத்தில் கம்பத்தில் கட்டிவிட்டு, உறங்கப்போனேன்.

“உங்கள் பதிப்பகம் தெரியாமல் தவிக்கிறோம். ஒரு சின்ன போர்டாவது எழுதிப் போடக்கூடாதா?’ என்று கேட்ட பலரின் கேள்விக்குப் பதிலாக, அந்த அட்டையைக் கட்டித் தொங்கவிட்டு, பூரிப்புடன் தொங்கும் அட்டையில் பார்த்த அந்த அற்ப சந்தோஷத்தில், உறங்கப் போனேன்.

காலையில் ஏதோ பெரிய சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தேன். கடைக்காரனின் குரல்தான் அது.