பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. இச்சகமும் அச்சகமும்


ஆண்டவனை உண்டு என்பார்கள் பலர். இல்லை என்பார் பலர். உண்டு என்றாலும் உண்டுதான். இல்லை என்றாலும் இல்லை தான். இதை எடுத்துக் கொள்வோர் பண்பைப் பொருத்தே பதில் அமையும்.

அதுபோலவே அவமானத்தையும்,உணர்வோடு ஏற்றுக் கொள்பவர்கள் சிலர் உதறிவிட்டுப் போவோர் பலர்.அந்த அவமானததின் சூழ்நிலையை, சூட்சமத்தை, சூட்டினை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு செயல்படுபவர் ஒரு சிலர் தான்.

அழுவதால் அவமானத்தைக் கழுவிட முடியாது. ஆத்திரப்பட்டுத் திட்டுவதால், அவமானத்தை துடைத்துவிட முடியாது. அடுத்தவர் யாரும் பார்க்கவில்லையே என்று விளைந்த வேதனையை, வெட்கத்தைக் களைந்துவிடவும் முடியாது.

ஏன் அந்த அவமானம் ஏற்பட்டது? நம்மை கேவலமாகப் பரிதாபப் பட வைத்த அவமானத்திற்குரிய பரிமானம் என்ன? பரிகாரம் என்ன என்று சிந்திப்பதும், திட்டங்களை வந்திப்பதும், காரியங்களை சந்திப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

அப்போதுதான் அவமானப்பட்டவரின் முழுத் திறமையும் வெளிப்படும். பெருமையும் பிறருக்குப் புரியும். பிரதாபமும் தெரியவரும்.

என் விளையாட்டு நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்கு நான் ஒரு அச்சகத்தையே ஆரம்பித்திருக்கிறேன். ஆர்வம் குறையாமல் இன்னல்கள் பல சேர்ந்தாலும் நடத்திக் கொண்டு வருகிறேன் என்றால், நான் அச்சகத்தை ஆசைப்பட்டுக் கொண்டு ஆரம்பிக்கவில்லை.