பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அவமானமா? அஞ்சாதே!



அடுத்த நாள் காலை, ஆவடிக்குப் போய், பிரஸ் சாமான்கள் வாங்கி வந்தது. மாஜிஸ்ட்ரேட் அவர்களிடம் பிரஸ் நடத்த அங்கீகாரம் பெற்றது. பிரஸ் ஆரம்பித்த இடத்தில் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சனை. பக்கத்து கடைக்காரர்களிடம் போட்ட சண்டை மூண்ட பிரச்சனை எல்லாம் பெரிய கதைதான். ஒரு நாவலே எழுதலாம்.

நினைத்தாலே நெஞ்சம் நின்று, பிறகுதான் துடிக்கும். அப்படிப்பட்ட அவலங்கள், ஆக்ரோஷமான தாக்குதல்கள். பிறகு, அச்சகத்தை விரிவுபடுத்துவதற்கு ஏற்பட்ட இன்னல்கள். இடைஞ்சல்கள்.

இவையெல்லாம் சகஜம்தான். எதிர்நீச்சல் போடுகிற போது, கைகள் வலிக்காமல், கால்கள் அயராமல் இருக்குமா!

எல்லா சோதனைகளுக்கும் மேலே எனக்கு ஏற்பட்டது மனமகிழ்ச்சியல்ல. மனதிருப்தி ஒரு ஆத்ம திருப்தி.

உன்னால் முடியாது என்று உறுமிய ஒரு மனிதனுக்கு முன்னே, என்னால் முடியும் என்று நம்பிக்கை கொண்டு, ஒரு அச்சகத்தை உருவாக்கியதுடன், எனது விளையாட்டுத் துறை நூல்களை வெளியிடும், ஒரு வாய்ப்பு ஏற்பட்டதே! என்று அந்த அற்புத மனிதரின் வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போட்டு வணங்கித்தானே, நமது நன்றியைக் கூற வேண்டும்.

இச்சகம் பேசுவோர் முன்பு உருவாகிய என்னுடைய அச்சகத்தைப் பார்க்கும் போதெல்லாம், இன்னும் எனக்கு அவமானம் பல நேரிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்னும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. வேண்டாம் என்றாலும் அவமானங்கள் என்னை விரட்டிக் கொண்டே வருகின்றன.