பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அவமானமா? அஞ்சாதே!


கொண்டேன். அதுதான் எனக்குப் பொல்லாங்காய் அமைந்துவிட்டது.

அந்த வீட்டுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று எல்லோரும் நினைத்துவிட்டார்கள் என்று அந்த வீட்டின் உரிமையாளர் நினைத்துவிட்டார். என்னைத் தங்கவிட்டால், அந்த வீடு பறிபோய்விடும் என்றும் தவறாக வேறு நினைத்துவிட்டார்.

என் பணியை அவர் தவறாக நினைத்ததுமே, தகராறு அவர் மனதுக்குள் தலை, தூக்கிக் கொண்டது. என்னிடம் பேசிய பேச்சுக்களில் அன்பு குறைந்தது. ஆணவம் கொடி கட்டிப் பறந்தது. நான் வாடகைக் குடித்தனக்காரன் என்று அவரது வசனம் வாய்வழியே வழிந்தது.

யாராவது வந்தவர்கள் என்னைப் பற்றி பேசினால், அதுவே அவருக்குப் பற்றிக் கொண்டு வந்தது. என்னைப் பார்க்கவும் விரும்பாதவராய், தன் மனைவி வாயிலாக வீட்டைக் காலி செய்துவிடும்படி வற்புறுத்தத் தொடங்கினார்.

நான் சரி என்று சொன்ன பிறகும், என்னைப் பற்றி தவறுதலாக மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார். அந்தப் பேச்சுக்களை சகித்துக் கொண்டு ஒரு சபதம் செய்தேன்.

இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறொரு வாடகை வீட்டுக்குப் போகிறேன். அந்த வீட்டையும் காலி செய்கிறபோது, போகிற வீடு என் சொந்த வீடாக இருக்க வேண்டும். அதற்குக் கடுமையாக உழைப்பேன் என்று என்னையறியாமல் எடுத்துக்கொண்ட சபதம் என்னை படுத்திய பாடுகளை இங்கே எழுதுகிறேன்.

அவமானத்திற்கு ஆளாகிற போதுதான் ஆக்ரோஷமானது அணையை உடைத்துக் கொண்டு குதிக்கிறது.

தன்னை மறந்து, தனக்குரிய சூழ்நிலையை மறந்து தாண்டிக் குதிக்க வைக்கிறது. சபதம் போடச் செய்கிறது.