பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

49



நல்ல ஏரியாதான் அதைப் பழக்கத்தில் வைத்திருந்தவர்கள். அப்படி அசிங்கமாக ஆக்கிவிட்டு பயன்படுத்தி வந்தார்கள். நாற்பது ஆண்டுகளாக அந்த காலி மனையை விற்பதற்கு உரிமையாளர் முயற்சிக்கிறார். விற்க முடியவில்லை என்பது ஒரு விந்தையான வரலாறு. அதையும் கேள்விப்பட்டேன். அந்த நில உரிமையாளரை சந்தித்து, நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். ஆச்சரியப்பட்ட அவர், அதிலுள்ள சிக்கல்கள், சிரமங்கள் பற்றியெல்லாம் விவரித்தார். நான் எடுத்த முடிவுதான். மளமளவென்று பத்திர வேலைகள் நடந்தன. நடந்து முடிந்தன.

அதற்குள் பலர் என்னிடம் வரத் தொடங்கினார்கள். முன்பின் பார்த்திராத அவர்கள், அந்த இடத்தை வாங்கக் கூடாது என்று அறிவுரை தந்தார்கள். சிலர் எச்சரிக்கை விட்டார்கள். ஒரு சிலர் வந்து, சென்டிமெண்டாக அந்த சனியனை வாங்காதீர்கள் என்று ஆருடம் கணித்தார்கள்.

எல்லாவற்றையும் விரட்டிவிட்டு, இடத்தை பத்திரப் பதிவு செய்தும் விட்டேன். கட்டிட வேலைகள் ஆரம்பமான போதுதான், கஷ்டங்கள் ஒவ்வொன்றாக தலை நீட்டின.

நான் வாங்கிய இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒருவரின் மனையை, 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஆக்கிரமித்துக் கொண்டு வாழ்ந்த 11 குடும்பங்கள்தான், எனக்குப் பெரிய பிரச்சனையாக எழுந்தன.

உங்கள் இடம் நாங்கள் ரோட்டுக்கு வரும் வழி. அதனால் இடத்தை வாங்காதே என்றனர். இடத்தை வாங்கிய பிறகு, வீடு கட்டாதே என்று வம்புக்கு வந்தனர்.

என் இடத்திற்கு காம்பவுண்ட் சுவர் போடுவதற்குள் காசும், நிறைய செலவானது. கஷ்டம் தருபவர்களின் மனப்பாங்கும் புரிந்தது. ஓடினால் விரட்டுவார்கள். எதிர்த்தால் பின் வாங்குவார்கள் என்ற சூட்சமத்தைப் புரிந்துகொண்டேன்.