பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. கொக்கும் கோழியும்


கிளர்ச்சியூட்டும் இளமைக்குள் கிடைத்து விடுகின்ற சக்திகளை, வளர்ச்சிக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடையோர்க்கு அழகு

அப்படி இல்லாமல், இருக்கின்ற சக்தியை இறைக்கின்ற சபல புத்தி உடையவர்களை என்ன சொல்ல? அவர்களை எதிர்ப்பவர்களும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிப் போகின்றார்கள். நோகின்றார்கள்.

இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதை, குரங்குக்கும் புத்தி சொன்ன குருவியின் கதையாய்ப் போய்விடும் என்று பயப்படுவோர் நிறைய பேர் உண்டு.

வாலிபர்களுக்கு வழிகாட்ட முயல்கின்ற காரியம் தேன்கூட்டைத் தட்டிவிட்டு, தேனிக்கள் கொட்டுகளுக்கு இரையாவதற்குச் சமம் என்பாரும் உண்டு.

சாக்கடை ஓரத்தில் நின்று கொண்டு சாக்லெட் சாப்பிடுவது தவறு என்றால், அதில் நான் தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன். உனக்கென்ன வந்தது என்று எதிர்வாதம் பேசும் இளைஞர்கள்தான், இன்றைய தலைமுறை எண்ணிக்கையில் அதிகம் என்பாரும் உண்டு.

சொல்வதுபோல் அவர்களுக்குச் சொன்னால், கேட்பவர்களும் உண்டு என்பது நிரூபணமாகிப் போயிருக்கும் பேச்சும் நியாயமே!

இதனால் இங்கே நியாயத்தைக் கூறாமல், நிதர்சனமான நிலைமையைக் கூற வருகின்றேன்.

இஷ்டம் போல் வாழ்கிறவர்கள் இளைஞர்கள் அல்ல.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று திட்டமாக செயல்படுகின்றவர்கள் இளைஞர்கள் அல்ல. தீர்க்கதரிசிகள்.