பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அவமானமா? அஞ்சாதே!



தன் மனதில் தோன்றுகிற எதிர்கால கனவுகளை நனவுகளாக்க, எண்ணங்களில் உண்மையானவற்றை மட்டுமே தெரிந்தெடுத்துப் பதித்துக் கொள்ள வேண்டும்.

சமுதாயத்திற்குள் வாழ்கின்ற கடமையால் சமுதாயத்திற்காக வாழ வேண்டும் என்பதைவிட, சமுதாயம் மதித்து வணங்குகின்ற முறையில் நீங்கள் சமத்காரமாக வாழ்வதையே முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொய்மையெனும் புழுதியிலும் புரள்வது எளிது தர்மத்தின் தலையில் அடித்து சாய்க்கின்ற சண்டித்தனத்துடன் வாழவதும் மிக எளிது. வாழ்க்கை மரபுகளை வெட்டி வீழ்த்துகின்ற மாபாதக பாவங்களை பண்ணுவது இன்னும் எளிது.

இந்தச் சமுதாயத்தில் இப்படி நடப்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மனிதர்களில் பல முக்கியத் தலைவர்கள், கினிதர்களாகப் போய் வெகுகாலம் ஆகிவிட்ட பண ஆசையும் பதவி மோகமும் பச்சைத் துரோக காரியங்களும் கூடிவிட பேய் பிடித்து அலைவதும் கண் கொள்ளாக் காட்சி, கன்றாவிக் காட்சி.

பணம்தான் வாழ்க்கையென்ற ஒரு பொய் நம்பிக்கையில் புரள்கின்றனர்.

அந்தப் பேய்த்தனமும், நாய்க்குணமும் அவர்கள் கடமை நிறைந்த மனதைக் கெடுத்து, நோய்களைக் கொடுத்து, மன உலைச்சலும் எரிச்சலும் ஊட்டி, தினமும் மரண வேதனைக்குள்ளே சாகடித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களும் செத்து செத்துப் பிழைக்கின்றனர்.

இனிமையான எதிர்காலத்திற்கு இன்று நாம் வாழ்கின்ற பண்பான வாழ்க்கையே 'பதினெட்டாம் படிகளாக' இருக்கின்றன.

நல்ல பண்புகள் என்பவை பலன் கொடுக்கும் விளை பயிர்கள். அந்தப் பயிர்களை வளர்க்க நல்ல நிலம் வேண்டும்.