பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அவமானமா? அஞ்சாதே!


உனக்கிருக்கிற தகுதி, திறமை என்ன என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்து கொண்டாக வேண்டும். அதுதான் தேடுதற்குரிய விஷயம்.

தன்னைத் தெரிந்துகொள்வதுதான் உண்மையான உண்மை. உயர்வுக்கு மேன்மை தரும் மேன்மை.

இதைத்தான் நான் தேடல் என்று சொல்கிறேன்.

தேடுதல் என்பது இரண்டு வகைப்படுகிறது. ஒன்று, அகத் தேடல்(Internal Search) இரண்டு புறத்தேடல் (External Search).

எனக்கு என்ன திறமை இருக்கிறது? எவ்வளவு ஈடுபாடு இதில் இருக்கிறது? இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ள முடியுமா? இதனால் என் வாழ்வு வளம் பெறுமா? வரலாறும் இடம் தருமா? என்று சிந்திப்பது அகத்தேடல்

என் திறமையை வளர்த்துக்கொள்ள என் குடும்பம் உதவுமா? பிறந்த குலத்திற்கு பெருமை தருமா? திறமையை வளர்த்துக்கொள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை உதவுமா? தடைகளை எழுப்புமா? தங்கு தடையின்றி முன்னேறும் வாய்ப்புகள் கை கூடுமா? என்று இடம் பார்த்து, தடம் பார்த்துக்கொள்வது புறத்தேடல்

'எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும். எப்படி கண்டு பிடிக்க முடியும்' என்று நீங்கள் என்னைக் கேட்டால், அதற்குப் பெயர் தன்னம்பிக்கையில்லாத கோழைத்தனம் என்று அர்த்தம்.

என்னால் முடியுமா? என்று உங்களை நீங்களே கட்டுக்கொண்டால், அதற்குப் பெயர் தன்னம்பிக்கையுள்ள தலைமைத்தனம் என்று அர்த்தம்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிற வேகத்தில்தான் விவேகம் பிறக்கிறது.

விவேகம் பிறக்கப் பிறக்க, அதில் பல நுணுக்கங்கள் பிறக்கப் பிறக்க, உங்கள் மனதிலே ஒரு வியூகம் பிறக்கிறது.

வியூகம் என்கிற திட்டமிடும் மனோபாவம் சிறக்க சிறக்க, உங்கள் மனதிலே ஒரு எழுச்சியும், செயலிலே பசி திரட்சியும் ஏற்படுகிறது