பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அவமானமா? அஞ்சாதே!


நமது காரியத்தை, மேற்கொண்ட பயணத்தைத் தொடர்வது போல, நாமும் அவமானப்படுத்துபவர்களை நாசூக்காக ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.

குப்பையைப் புறம் தள்ளிவிட்டால், இடம் சுத்தமாகிவிடும். அதுபோல குப்பை மதி கொண்டவர்களை, நமது அட்டவணையில் சேர்க்காமல் அடித்துத் திருத்தி அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, குப்பைகளைக் கொண்டு வந்து நடு வீட்டில் கொட்டிவிட்டால், நாறுவது நம் வீடுதானே! அதுபோல் அவமானப்படுத்தும் அயோக்கியர்களை, நம் நெஞ்சுக்குள் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டால், நஞ்சாகிப் போவது நமது நெஞ்சம்தானே!

ஆகவே, அவைகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்த முயல்வோம். அதுவே நமக்குப் பெரிய வெற்றி, பேராண்மையும் கூட.

தென் ஆப்பிரிக்காவில், தேசப்பிதா காந்தி பெறாத அவமானமா நமக்கு வந்துவிடப் போகிறது!

ரயிலிலிருந்து தூக்கியெறியப்பட்டார். பல் உடைவது போல நையப் புடைக்கப்பட்டார். அதனால் எல்லாம் அவர் தாழ்ந்துபோய் விட்டாரா என்ன? தலை குனிந்து, இலட்சியத்தை விட்டு ஒளிந்து கொண்டாரா என்ன?

அவர் பெற்ற அவமானங்கள்தாம் அவரை மனிதராக மாற்றி, மகாத்மாவாக உயர்த்தி விட்டிருக்கிறது. அவர் செய்த செய்கைகள் எல்லாம். என்றும் வாழப்போகிற இயற்கையாக ஆகி விட்டதல்லவா?

ஆகவே, அவமானங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். அவமானப்படுத்தியவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். தாழ்வு மனப்பான்மை கொண்டு உளராதீர்கள். அதையே உள்ளத்தில் போட்டுப் போட்டுக் கரையாதீர்கள்.

தரையென்றால், பள்ளமும் மேடும், கல்லும் முள்ளும் இருப்பதுபோல, வாழ்வென்றால் எல்லாமும் இருக்கும். பார்த்து நடப்பதும், பயப்படாமல் தடுப்பதும் பண்பார்ந்த செயல்கள் அல்லவா?