58 லா. ச. ராமாமிருதம்
—ஒரு நிமிஷம், பாஸ்கர். நான் நல்ல தமிழ் எழுதுகிறேன் இல்லை? எல்லாம் காலேஜில் உன் சிக்ஷைதான்!
பாஸ்கர்! நான் மகானில்லை. ஓ, உனக்கு அது தெரியும். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், ஒண்ணு பாக்கியில்லை. ஆனால் எனக்கு எதிலேயுமே பிடிப்பு இல்லை. என் கோளாறே அதுதான். இதைவிட அது, அதைவிட எது என்று ருசி பார்த்துப் பார்த்தே, கிளைக்குக் கிளை தாவியே. எனக்கு எதிலுமே ஆழமான பற்று இல்லாமல் போய்விட்டது. பற்றற்றானின் தனிமை பயங்கரம், பாஸ்கர்!
என் பெற்றோர்கள், எனக்குச் சின்ன வயதிலேயே, மோட்டார் விபத்தில் இருவருமே மாண்டபின், nursery, nursing home, hostel, hotel, என்று வளா்ந்து இதற்குள் வங்கியின் trusteeshipஇல் விட்டுப்போயிருந்த என் சொத்து எக்கச்சக்கமாக வளர்ந்து, எனக்கு வயது வந்ததும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதும், அதன்மேல் முதல் வெறி தணிந்த பின், அப்புறம் என்ன? extreme boredom தான். மாறுதலுக்கு மாற்று ஏதோ ஒண்னு எனும் desperation, depression தான். எனக்கு discipline கிடையாது, எனக்கே தெரிகிறதே!
காலேஜிலிருந்தே என்னை அறியாமலே எனக்கு இந்தப் பார்வைதான் என்று எனக்கு இப்போ தெரிகிறது. அப்பவே உனக்கு நான் அப்பப்போ புத்தகம், நோட்புக், Special fees என்று திருப்பித் தரமுடியாத கடன்களாக உதவி செய்தபோதிலும் எனக்கு உள்ளுர amusement தான். உன் நிலைமை, பாஸ்கர், பாவம், அப்போதிலிருந்தே, ஏன், எப்பவுமே சரியாக இருந்ததில்லை அல்லவா? என் பேப்பர்களை நீ தயார் செய்தாய், என் home workஐ நீ செய்தாய். நீ எனக்கு ஒரு Sydney Carton ஆக இருந்தாய், பேரம் நல்ல பேரம்தான், இல்லையா?