60
லா. ச. ராமாமிருதம்
மர்ம அரங்கு Roman Arenaத்தான். மாறுதலாக வேறு ஏதேதோகூட இருக்கலாம். ஆனால் அவனவனுக்கு என்ன பார்க்கக் கிடைக்கிறதோ அதுதானே!
So! உன் கலியாணத்தின் ரிஸெப்ஷனுக்கு நான் வந்த போது—ஜானவாசத்துக்கே எதிர்பார்த்ததாக நான் வந்ததும் கோபித்துக்கொண்டாய்—நான் ஒரு ரோஜாப்பூவை, அதன் காம்பு ஒடியாமல், வெகு ஜாக்கிரதையாக, ஒரு மிகை மரியாதையுடனேயே உன் மனைவியிடம் சமர்ப்பித்தபோது, “ச் அனு, இவன்தான் திவாகர், என் ஆப்த நண்பன்” என்று நீ அறிமுகப்படுத்தினாலும், உன் முகம் விழுந்தது எனக்கல்லவா தெரியும்? உள்ளூர எப்படி அனுபவித்தேன் தெரியுமா? குறைந்தபட்சம் ஒரு ப்ரஷர் குக்கரேனும் எதிர்பார்த்தாய் அல்லவா? Oh! my secret laughter!
ஆனால் அனு, எவ்வித கல்மிஷமுமில்லாமல், புன்சிரிப்புடன், என் புஷ்பத்தை வாங்கிக்கொண்டு தலையில் சொருகிக்கொண்டதும்—நம்பினால் நம்பு, நம்பாட்டிப் போ—அதுவே எனக்கு ஒரு pleasure ஆக இருந்தது; Oh strange pleasure, இதுவரை எனக்குப் பழக்கமில்லாத ஒரு pleasure.
என் secret laughter இத்துடன் முடியவில்லை.
ஒரு பத்து நாள் கழித்து. மாலை, உன் வீட்டுக்கு வந்தேன். இதெல்லாம் உனக்குத் தெரியாததல்ல. ஆனால் எழுத்தில் இப்படி நினைவுகூட்டிப் பார்ப்பதில் ஒரு தனி கவித்வம், எனக்கே சொந்தமானதோர் சந்தோஷம். ஒரு புது dimension உணர்கிறேன்.
அனு நல்லாத்தான் டீ செய்கிறாள்.
என் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன சம்புடத்தை எடுத்து அனுவிடம் கொடுத்து—
“Press the button.”