பக்கம்:அவள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

லா. ச. ராமாமிருதம்

மீண்டும் தலையை ஆட்டினாள். அவள் புன்னகை ஆழ்ந்தது.

“உங்களுக்குச் சக்தியிருக்கலாம் கொடுக்க. ஆனால் வாங்கிக்கொள்ள எங்களுக்குச் சக்தி வேண்டாமா? தற்சமயம் நிச்சயமாக இல்லை. ரொம்ப thanks, உங்கள் டீ ஆறிப்போறது.”

என் அனுபவத்தில் முதன்முறையாகக் கன்னத்தில் அறை தாங்கிக்கொள்வது சிரமமாகத்தானிருக்கிறது.

“நகையை வேண்டாமென்று சொல்கிற பொம்மனாட்டிகூட இருக்காளா?” என்றேன். பாதி கேலி, பாதி வெறுப்பு.

“ஏன், என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படிப் படுகிறது? கால்கட்டை விரலிலிருந்து மார்புவரை தன்னை ஒரு கண்ணோட்டம் விட்டுக்கொண்டாள். அது அவளுடைய கேலி. “இந்தாங்கோ, பத்ரம்” நகைப்பெட்டியை என் கையில் திணித்தாள் “வரேன், அடுப்பில் குழம்பு காயறது. இங்கேயே இன்னிக்குச் சாப்பிடுங்களேன். சுண்டைக்காய் வத்தல் குழம்பு. கருவடாம் பொரிக்கப்போறேன். ஒட்டலில் கிடைக்காது. உங்களுக்குத் தினம்தான் ஒட்டல் சாப்பாடு, இன்னிக்கு என் கைவரிசையைப் பாருங்களேன்!”

உள்ளே போய்விட்டாள்.

குழம்பு மணம் கூடத்தைத் தூக்கிற்று.

ஆனால் நான் ஏதோ சாக்குச் சொல்லிக் கழன்று கொண்டேன்.

அன்றுதான் உங்களிருவரிடையே முதல் தர்க்கமோ, பாஸ்கர்?

எனக்கும் அன்றிரவு சரியான தூக்கம் இல்லை, வெகு நேரம் படுக்கையில் புரண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/106&oldid=1496867" இலிருந்து மீள்விக்கப்பட்டது