xi
போர்த்திக்கொள்ளப் பார்க்கிறேன்.
" என்ன தாத்தா இழுத்துட்டியே!”
"இல்லை, போர்வை உன்மேலேதான் இருக்கு."
சற்று நேரம். முரண்டல். அப்புறம் சமாதானம்.
"தாத்தா கண்ணை மூடிக்கோ."
"நீ?"
"நானும் மூடிக்கறேன் . மூடிய கண்களுடன் குழந்தை முகத்தில் புன்னகை படருகிறது, விக்ரஹம் சிரிக்கிறது.
இருவருமே வாய்விட்டுச் சிரிக்கிறோம்.
"தாத்தா நா இனிமே அயவே மாட்டேன். சிரிக்குவேன்."
குழந்தாய், நீ அழுதாலும் எனக்கு ஒரு அழகுதான்.
என் கைகள் கூம்புகின்றன. அதைப்பார்த்து, அவளும் கும்பிடுகிறாள்.
திடீரென்று நினைத்துக் கொண்டு எழுகிறாள். "தாத்தா, சீகாந்தைக் கண்டிக்குவணும். என்னைக் கிள்ளறான்.
புது வார்த்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். போர்வையைக் களைந்துவிட்டுப் புறப்படுகிறாள்.
"சீகாந்தை என்னடா ஹும் சொல்லிட்டு வரப்போறேன்". தூக்கம் மறந்தாச்சு, தாத்தா மறந்தாச்சு, ஒடுகிறாள்.
குழந்தைகளின் எந்தச் செயலிலுமே எப்படி ஒரு புதுமை, அலுக்காத அழகு மிளிர்கிறது. அவர்கள் மழலையில் பாஷை புத்துயிர் கொள்கிறது. புதுச் சொற்கள் பூக்கின்றன. சப்தம் சட்டையுரிக்கிறது.