பக்கம்:அவள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

67

ஒருநாள் தாத்தா விடிகாலை, வெள்ளி முளைச்ச வேளைக்குத் தன் பங்கு ஆற்றுப் பாய்ச்சலை மேலத்தனம் பண்ணப் போனவரைப் பத்து மணி வேளைக்கு நாலு பேர் சுமந்து வந்து, கூடத்தில் விசுப்பலகையில் கிடத்தினார்கள். கழனிக்கட்டுச் சேறில், தன் நினைப்பற்றுக் கிடந்தாராம். Stroke. அந்த நாளில், கிராமத்தில் அதற்கென்ன பாஷையோ? ஒருநாள் இரண்டு நாள் கோமா இல்லை. மூணு வருஷம்; என்ன சொல்றேள்?

தாத்தா வருஷத்துக்கு ஆறு தெவசம் பண்ணுவாராம். அத்தனையும் நின்றுபோய், பிதுர்க்கடன் ஏறிப்போச்சு. இப்போ எனக்குத் தெரிஞ்சே கிராமத்தில் ‘துபாய் போறேன்’ ‘ஸவுதி போறேன்’னு, அங்கெல்லாம் எந்த சாஸ்திரி கிடைக்கிறான்? தாகத்துக்கே பெட்ரோல்தான். காக்காய்க்குப் பிண்டமானும் வைக்கலாம் என்றால் அங்கே காக்கா இருக்கோ? எனக்குத் தெரியாது. ஒ, அங்கங்கே problems இருக்கு. ஆனால் அதுக்கெல்லாம் கிராமத்துலே பயப்படுவா. கிராமத்துலே வளர்ந்தவள் தானே நானும்! நானும் பயப்படறேன். எல்லாமே பெரியவாள் காட்டற பூச்சாண்டின்னு தள்ளிடற அளவுக்கு நமக்கு முழுக்கத் தைர்யம் இல்லியே; உப்பும் தணலோடு ஆற்றில் கரைக்கற அஸ்தியும் சேர்ந்து, அதன் பேர் பயமோ, நம்பிக்கையோ, பரம்பரையா உடம்பில் ஊறிப்போயிருக்கே!

பாட்டிக்கு உடம்பிலே ஆயிரம் கோளாறு. கேட்கப் போனால் தாத்தாவுக்கு மேலே. தாத்தாவுக்கென்ன, அவர் விழுந்தது ஒண்ணோடு சரி, பாட்டிக்கு. P.B., சர்க்கரை, உப்பு, ulcer, கண்ணில் சதை, கீல்வாயு, ஆஸ்துமா, பல்வலி, ஆனால் முக்கிண்டே முனகிண்டே வளைய வளைய வந்து கொண்டிருந்தாள். சரீரம் வேறு ‘பொந்தகா’. ஆனால் தாத்தா மாதிரி உயிர்ப்பிணம் ஆகல்லியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/111&oldid=1496888" இலிருந்து மீள்விக்கப்பட்டது