68
லா. ச. ராமாமிருதம்
தாத்தாவும் பாட்டியும் அப்படி ஒண்ணும் ஒத்துமையான தம்பதியில்லே. ஒரு சமயம், ஏதோ மன ஸ்தாபம், மூணு வருஷம் பேசாமலிருந்தாளாம். Can you imagine? பேச்சு மட்டும் தான் இல்லை. மற்றபடி எல்லாம், வழக்கம் போல், கடிகாரக் கணக்கில்... தாத்தாவுக்குத் தினப்படி பூஜா திரவியங்கள், சமையல், பரிமாறல், வஸ்திரமடி, மத்தியான ஆகாரம், ராத்ரி பால், படுக்கை—எல்லாம் மை போட்ட சக்கரக்கணக்கில் நடந்துகொண்டிருந்தது. தாத்தா ஒரு ஜாடைகூடக் காட்ட வேண்டாம். காட்டவில்லை. தாத்தாவின் வயிறு, நாக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாம் பாட்டிக்கு அப்படி ஒரு அற்றுபடி. தாத்தாவுக்கு ஒரு தலைகூட வலிக்காது. பாட்டிக்கு என்னவாக உடம்பு இருந்தால்கூட தாத்தா திரும்பி நின்னுகூடப் பார்க்க மாட்டாராம். ‘My pound of flesh’ மனிதராம்.
அப்புறம் எப்படித்தான் சமாதனமானாள்னு கேட்பேளே! ஒ சிராத்தத்தின்போது, ஒளபாசனத்துப் புல் பிடிக்க, சமையல்கட்டில் வேலையாயிருந்த பாட்டியைக் கூப்பிடும்படி ஆயிடுத்தாம். மாமியைக் கூப்பிட சாஸ்திரிகள் மறுத்துவிட்டார். ‘இந்த நியாயப்படி நித்யானுஷ்டான கர்மாவுக்கு உங்கள் தர்மபத்தினியை நீங்கள் அழைக்காமல், என்னவோய் சிரார்த்தம் வேண்டிக் கிடக்கு?’ சாஸ்திரிகள்தான் புதுசோ, இல்லை இரும்புத் தலையனோ? தெரியல்லே. இல்லை, இதுவே ஒரு சூழ்ச்சியோ? ஆகவே கூடத்திலிருந்து தாத்தா பாட்டியைக் கூப்பிடும்படியாகிவிட்டது. கூப்பிடறதாவது. ஒரு உறுமல். அந்த நாள் பாஷையே அதுதான் உறுமும்படி ஆகிவிட்டது.
அதற்கே பாட்டி, “உங்கப்பாதான் முதல்லே பேசினா”ன்னு பீத்திப்பாளாம். உடனே அதை ஒட்டி இன்னொரு சண்டை.”