பக்கம்:அவள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

75

எங்கே? திடீரென எனக்கு நேரம் குறுகிவிட்டதாக ஒரு உணர்ச்சியா, உணர்வா? So immediately to the turning point.

அன்று மாலை, டெலிபோன் அடித்து எடுத்ததும்,

“மிஸ்டர் திவாகர்?” அனு. அதுவே ஒரு ஆச்சரியம்.

“என்ன அனு, ஏது இந்த கெளரவம்?”

“அவருக்கு ஜுரம், நினைப்பே இல்லை. திவாகர், வாங்கோளேன்!”

அனு கலங்கும்படி ஆனால், Serious தான்.

டாக்ஸி பிடித்து, கூடவே டாக்டரையும் பிடித்து அழைத்துக்கொண்டு—(நான் ஏன் கார் வைத்துக்கொள்ளவில்லை? கேட்கவில்லையா? அது ஒரு நியூசென்ஸ் அப்படி எனக்கென்ன Social activities, engagements கெட்டுப்போகின்றன?)—உன் வீடு சேர்ந்ததும், தட்டாமலே கதவு திறந்தது. அனு காத்திருந்திருக்கிறாள். உள்ளே வந்ததும்,

கட்டிலில் நீ கிடந்த நிலை கண்டதும் எனக்கே ‘திக்’ கென்றது. கண் அரைக்கண். உதட்டோரம் வழிந்து காய்ந்த எச்சில் இன்னும் வழிந்துகொண்டிருந்தது. பரீசீலனையில் டாக்டர் உன் கையைத் தூக்கினால், அது தன் இயக்கம், சுரணையின்றி பொட்டென்று விழுந்தது. இமைகளைத் தூக்கி, டார்ச் அடித்தால், விழிகளில் சுணக்கம் காணோம். மார்பின் அந்த மிதப்பு தெரியாவிடில், நீ பச்சை மூங்கிலுக்குத்தான். என் ஜோக் சமயமாயில்லே. ஸாரி. நான் ஜோக் அடிக்கவில்லை. முகமும் மார்பும் நெருப்புச் சிவப்பு. ஜூரம் மழுவாய்க் காய்ந்தது.

மூவரும் உன்னையே பார்த்தபடி உன்னைச் சூழ்ந்து மோனத்தில் சமைந்து எந்நேரம் நின்றோமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/119&oldid=1496920" இலிருந்து மீள்விக்கப்பட்டது