xiii
ஆற்று மணலுக்கப்பால், சோலைகளின் நடுவினின்று. அதோ அகன்றதோர் கோபுரம் கம்பீரமாய் எழுகிறது. ஸ்ரீரங்கம். உடனே பின்னால் திரும்பிப்பார் பிரம்மாண்டமான விலங்கு படுத்திருப்பது போல், மலைக்கோட்டை. அறியாமலே அஞ்சலியில் சிரமேல் குவிகின்றன.
இவைகளின் நடுவே காவேரிப்பாட்டி பாரியாகப் படுத்திருக்கிறாள். புதுவெள்ளம் அவளுடைய நரை கூந்தலாக, அலை அலையாய், சடைசடையாய் நுரை நுரையாய்க் கனத்துப் புரள்கிறது.
அம்மாடி! பிரம்மாண்ட ஒவியம். இதைத் தீட்டிய தூரிகை வீச்சில் நான் எம்மாத்திரம்! அல்ல, சின்னஞ்சிறு சுழி. ஆனால் இதில் என் இடம் கண்டு கொண்டபின் நானிலாது இந்த ஓவியம் பூரணமில்லை. எவனுமே அவனவன் இடத்தில் பூரணத்தின் பங்கு. பூரணத்துக்குப் பூரணம் தந்தபடி, பூரணத்துடன் இழைந்து இயங்கும் இந்தப் பேறு கிடைக்க, அதை உணர என்ன தவம் செய்தேனோ!
எந்தக் கவிதையும் யாருடைய சொந்தக் கவிதையில்லை.
எல்லாம் அவள் மாலையிலிருந்து உதிரும் இதழ்கள்.
விழும் இதழ்களை உண்டவன் பாக்யவான்.
ஏனெனில், அப்போது அவள் கண்கள் பூமியின் கவிதைக்குத் திறக்கின்றன.
உள்ளமெல்லாம், உள்ளே உடல் பூரா கமகமக்கிறதே!
பூமியின் கவிதையில் ஒரு வரியாக விளங்கக்கூட நான் ஆசைப்படவில்லை. என்ன பேராசை அசட்டுத் துணிச்சல்! ஆனால் ஆகாசத்தையே ஆலிங்கனம் செய்யும் ஆசைக்கு அடங்கல் ஏது?