92 லா. ச. ராமாமிருதம்
நேரம் முதிர முதிர, வானம் சாம்பல் பூத்துப் படர்ந்து, திட்டு வலுத்து வெண் சிவப்பாகி அடுத்து அத்துடன் மஞ்சள் குழைந்து, செஞ்சிவப்புச் சாயம் தோய்ந்து— என்னுள் ஏதோ பரபரப்பு— ஏதோ கம்பீரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது எனக் கொரு விழிப்பு. விழிப்புள் விழிப்பு.
தங்கத் தாம்பாளம் தகதகத்துக்கொண்டு எழுகிறது. அதனுள் விடும் ஒளி மனிதனா, தேவனா? பார்வையைப் பறிக்கும் அந்த ப்ரகாசத்தின் கூச்சம், அந்த ஊருக்குத் தெரியவில்லை. தெரியலாகாதென்றேதான் இந்த ஒளியோ? பலவர்ண மேகத்திரள்கள் பரிவாரம் சூழ்ந்திருக்கின்றன. நான் என்னவோ இருக்குமிடத்தில் தான் இருக்கிறேன். ஆனால் நானும் இந்தப் பரிவாரத்தில் சேர்த்திதான். எப்படியென்று தான் விளங்கவில்லை. இத்தனை மேகங்கள் எப்போது திரண்டன? நாளாவட்டத்தில் தெரிந்துகொண்டேன். முதன்முதலாக நினைவு தோன்றிய நாள் முதலாய் இப்படித்தான் நேர்ந்துகொண்டிருக்கிறது. திடீரென்று பாறை பாறை, மதில் மதில், உடனேயே அத்தனையையும் விரட்டி அடித்துவிட்டு, பூரித்த முழு நீலத்தின் நடுவே புரியாத கோலத்தில் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அந்த ஜோதி.
இவருடைய ரலமி படாத இடமே இல்லை. என் மேல் என்னைச் சூழ்ந்து செழித்த பசுமையில், என்னைப் போலவே ஆங்காங்கே நிற்கும் இக்குன்றுகள் மேல், விட்டு விட்டு நட்ட தந்திக் கம்பங்களில், கம்பிகள் ஜ்வலிக்கின்றன. தந்திகள் வாசிக்கின்றன. இருந்த இடத்தில் இருந்தபடி, இந்தப் பெரிய ஆசீர்வாதத்தில் அதிசயிக்கத்தாட்; முடியும். அதிசயிக்கி றேன்.