பக்கம்:அவள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசயம் விழிப்பின் விரிவு.

அதோ மலைமீது கோவில் ஸ்துாபியைத் தகதகப்புத் தொட்டு, ஸ்துாபி நெருப்புப் பந்தாய் மாறுகிறது, மலை அடிவாரத்தில், ஏரியில் நீர்மட்டம் வெள்ளித் தகடாய் மாறிவிட்டது.

ஆள் நடமாட்டம் ஆரம்பித்து, உடனேயே அதிகரித்தும் விட்டது. மனிதன் மறுபடி ஒடியாடி அலைய ஆரம்பித்து விட்டான். படிப்படியாக உயர்ந்து உச்சியை அடைந்ததும் வெயிலின் வெம்மையில், நான் காணும் உலகம் திரைச்சீலையாக நடுங்குகிறது. இந்தச் சமயத்துக்கு இவருக்கு ஏன் இத்தனை கோபம்?

ஆனால் உச்சியிலிருந்து இறங்கத் தொடங்கியதும், இந்தக் கோபம் தணியத் தொடங்குகிறது. அவரும் படிப்படியாக இறங்குகிறார். எதிர்வானம் தண்ணிய சிவப்பில், மேகங்கள், பலவர்ணத் தீட்டலில், பாறைகள், குடிசைகள், தீசல்கள் ஈட்டுகின்றன. அவருடைய அற்புதமான ஜ்வலிப்பை இப்போது கண்ணைக் கூசாமல் தரிசிக்க முடிகிறது.

என்றோ ஒரு நாள். இந்தக் காலத்தின் அளவு என் கணக்கிலுமில்லே மனிதன் கணக்கிலுமில்லை. என்றோ ஒருநாள் நானே இந்த நெருப்பின் பொங்கலில் சிதறித் தெறித்த செந்தணல் பொறியாகப் பூமியில் விழுந்து நீர்த்து இறுகிப்போய் நாளடைவில் மண்ணும் புழுதியும் சேர்ந்து கெட்டிப் பட்டுப்போன உருவமோ என்று திகைக்கையில் என் கல்லும் குறுகுறுக்கிறது.

ஒளிமங்கி, இருள்கூடி, இரவு மீண்டும் வந்து விட்டது. இப்படி மாறி மாறி பகல் இரவைத் துரத்தி, இரவு பகலைத் துரத்தி இந்த ராட்டினம் இதுவரை எத்தனை, இனிமேலும் எத்தனையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/137&oldid=1496982" இலிருந்து மீள்விக்கப்பட்டது