பக்கம்:அவள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 லா. ச. ராமாமிருதம்

இதுபோன்ற ஒரு பகலில் கிழவனார் ஊருக்குப் போய்விட்டார். அவரை வண்டி ஏற்றி அனுப்பி விட்டு, பையன் திரும்பி வந்து வாசற்படியில் முழங்கால்களைக் கட்டிய கைகளினிடையே முகம் கவிழ்ந்து உட்கார்ந்துவிட்டான். அவன் தோள்கள் குலுங்கின. இவன் துக்கத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்?

மறுபடியும் அவன் இஷ்டப்படி தான் வருகிறான். போகிறான். அவனால் முடிந்ததும் அதுதான். மனிதர்களின் கவலைகள், துயரங்கள், அவரவரது தனித்தனி.

என்னைச் சூழ்ந்த மற்ற குன்றுகளைக் காட்டிலும் நானே பெரியவனாயிருக்கிறேன். உயரமில்லை, பரவல். என் நடுவே ஒரு சுனை. தண்ணீர் மெதுவாய்க் கொப்புளித்த வண்ணமாயிருக்கிறது. பூமியின் கீழ் என் வேரும் அதன் சுரப்பும் எத்தனை ஆழமோ? தண்ணீாின் விறுவிறுப்பை உணர்கிறேன். ஆனால் இதைத் தேடி வருவோர் அதிகமில்லை. சுற்றி கிணறுகளும் பம்புசெட்டுக்களும் ஏராளம் எட்டு தூரத்தில் ஏரி.

என் விலாவில் கரடு முரடு பள்ளங்களும், மேடுகளும், புரையோட்டங்களும், முடிச்சுக்களும்.

ஒரு பிற்பகல். இரண்டு வாண்டுகள் வந்து என் மேல் உட்கார்ந்தன. ஒருவன் இருமிக்கொண்டே, கஷ்டப்பட்டுப் புகை பிடிக்கிறான். இவன், டேய், இதனுள்ளே இருள் இருளா இடமெல்லாம் இருக்குது. நீ உள்ளே போயிருக்கியா?"

"நீ போயிருக்கையா?”

"போனேனே, பத்து நாளைக்கு முன்னாலே."

"என்ன கண்டே, ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/138&oldid=1496983" இலிருந்து மீள்விக்கப்பட்டது