பக்கம்:அவள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 லா. ச. ராமாமிருதம்

என்னைச் சுற்றி வீடுகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. காலியாகின்றன. குடித்தனங்கள் மாறுகின்றன. வயல்களில் கதிர்கள் பெருமூச்செறிகின்றன. ஏரி வற்றுகிறது. மழை பெய்கிறது. தடித்த தூறல்கள் என்மேல் தமுக்கு வாசிக்கின்றன. மழை கொட்டுகிறது. ஏரி நிரம்பி வழிகின்றது. குளிர் கிட்டுகிறது. இலைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகின்றன. நான் ஏற்கனவே நிர்வாணம்தான். ஆனாலும் இப்போது அதுமாதிரி ஒரு உணர்வு தோன்றுகிறது.

மரங்கள் ஒரு பக்கம் பட்டுப்போய்க்கொண்டே மறு பக்கம் துளிர்க்கின்றன. ஏதேனும் நிகழ்ந்துகொண்டு வர்ணங்கள் நேர்ந்த வண்ணமிருக்கின்றன.

ஒரு தினம் எனக்கு அண்டைக் குன்றை மொய்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் அத்தனைபேரும் சட்டென இறங்கி ஓடிப்போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சத்தத்துடன் குன்று வெடித்தது. பெரிய விரிசல், பெரிய பள்ளம் விட்டுக்கொண்டு பெரிதும் சிறிதுமாய்க் கற்கள் சரிந்தன. அதை என்னவோ செய்திருக்கிறார்கள்.

எனக்கும் இந்தக் கதிதானே ஒருநாள் என்று தோன்றினதுமே உள்ளே 'சில்'லென்றது. ஆகவே ஆயசு எனக்கும் கணக்கில்தான் இருக்கிறது. இது நல்லதா, கெட்டதா? புரியாத புதுக்கேள்வி வாட்டுகிறது. ஆனால், எது, என்ன, எப்படி நேர்ந்தாலும் என்னால் என்ன செய்ய முடியும்? அன்றொரு நாள் பறந்துகொண்டேயிருந்த பகூி ஒன்று பொத்தென என்மேல் விழுந்து பொடி நேரத்தில் உயிரற்று சிறகுக் குதறல் ஆகிவிட்டது. மாரடைப்பா, சிறகின் களைப்பா, விழுந்த அதிர்ச்சியா, எது எப்படியிருந்தாலும் என்னால் என்ன செய்ய முடிந்தது? மொத்தாகாரமான, செயலற்ற ஜீவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/140&oldid=1496989" இலிருந்து மீள்விக்கப்பட்டது