38 லா. ச. ராமாமிருதம்
நிற்கவா, நிற்குமளவுக்கு ஆழம் இருந்ததா? முழுக்க மூழ்கியேவிட ஆழம் இருந்ததா? கேள்விமேல் கேள்வி நெஞ்சில் அடுக்கிச் சரிந்தன.
கண்களை இறுக்க மூடிக்கொண்டு, உள்ளே கூசிப் போய் -
இவள் நிலை பொறுக்க முடியவில்லை. என் செய்வேன். நண்பன் என்று சொல்லிக்கொண்டு காற்றின் வேலை. "இப்போ ஒரு வேடிக்கை காட்றேன் பார்! இது ஒரு விளையாட்டா, ஐயோ என்ன செய்வேன்!
என்ன செய்தான் என்று தன் நினைப்பிலேயே அவன் இல்லை. இடுப்பு லுங்கியை அவிழ்த்து அவளிடம் வீசியெறிந்தான். மூழ்குபவன் கரையோரம் கோரையைப் பற்றுவதுபோல் அவள் அதைப் பற்றிக்கொண்டு தண்ணீருள் மூழ்கினாள்.
"ஏண்டா, நீங்க அவங்க அவங்க தாய்மாருக்குப் பொறந்தவங்கதானே! உங்களுக்கு அக்கா தங்கை, பொண்ணுன்னு கிடையாது? வேடிக்கையா! பாக்கறிங்க உங்களுக்கு வெக்கமாயில்லே?"
இத்தனை சீற்றம் எங்கிருந்து வந்தது? இந்தக் கோபம் அவனுடையது மட்டுமன்று. இது மானுடத்தின் கொதிப்பு. உடம்பு கிடுகிடென ஆடிற்று.
அவர்கள் பின்னடைந்தனர், அந்தச் சொற்கள், அந்தக் குரல் அவர்களுடைய பச்சை நரம்பை எங்கோ தொட்டிருக்க வேண்டும். பதில் பேசாமல், ஒன்றும் இரண்டுமாய் விலகிப்போனார்கள். போயேவிட்டார்கள்.
இறங்கி வந்தான். தண்ணீரினின்று அவள் எழுந்தாள். வேட்டியை, அக்குள் வரை இழுத்து இறுக்கிக் கட்டியிருந்தாள்.