100 லா. ச. ராமாமிருதம்
உதறிற்று. குளிரா, பயமா, இரண்டுமா? விழிகள் ஏற்கனவே பெரிதில், பயத்தில் இன்னும் பெரிதாய்க் காட்டின.
"எங்கிருந்து வரே?"
கையை வீசி, அஸ்வாரஸ்யமாய் எங்கோ காட்டினாள். புரியவில்லை. இப்போது அது அவளுக்கு முக்கியமில்லை.
திடீரென்று தேம்பித் தேம்பி அழுதாள், மார்பே உடைந்து விடும்போல்.
"ஏன் அளுவரே? இப்ப என்ன ஆயிடுச்சி?' என்று முனகினான். அவனுக்கே அவன் வார்த்தைகளில் தைரியமில்லை.
"இன்னும் என்ன ஆவனும்? மானம் போச்சே! நாலு பேர் கண் எச்சில் பட்டிடுச்சே!”
"சரி, இப்போ என்ன பண்ணச் சொல்றே நீயே வாங்கிண்ட வினைதானே!"
இதைக் கேட்டதும் சற்று அடங்கினாள். புடவை மேல் கல்லை வெச்சிட்டுத்தானே தண்ணியிலே இறங்கினேன். தண்ணிமேலே திடீர்னு ஆசை ஆயிடுச்சு."
"சரி விடு" சங்கடமாயிருந்தது.
"புடவையில்லாமே எப்பிடி வீட்டுக்குப் போவேன்? என் நயினாவை உனக்குத் தெரியாது. சித்தாத்தாளைத் கூட ஒரு கணக்கிலே சேர்த்துக்கலாம். அவரை முடியாது. வீட்டைவிட்டுத் துரத்திடுவாரு."
"இதோ.பார். இப்படியெல்லாம் பேசி ஒரு மண்ணும் ஆவப்போவதில்லை. நிலைமையை சமாளிச்சுத்தான் ஆவணும். நானும்கூடத் துணைக்கு வரேன்."