104 லா. ச. ராமாமிருதம்
"ஓ! குட்டி உன் பேர் என்ன?”
"அபிதா"
"அம்மா ஆபிசிலிருந்து வரவரைக்கும்?"
"நான், இவள் மாமா பெண் என் பேர் புவனா" - புவனா பேச்சை எடுத்துக்கொண்டாள்.
"இவன் முரளி, என் தம்பி. நாங்கள் அடுத்த தெருவிலிருக்கோம். அத்தை இப்போ ஆபிசிவிருந்து வர நேரமாச்சு. அதான் வந்திருக்கோம்."
"அபிதா அப்பா?"
"அப்பாவுக்கு ஊரிலே ஆபீஸ், இன்னிக்கு ஊரிலிருந்து வவ்வா. எனக்கு ஜாங்கிலி வாங்கிண்டு வவ்வாளே!"
"முரளிக்கும் வாங்கிண்டு வருவாளே!"-முரளி, தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டான். அவனுக்குக் கடைவாயில் எச்சில் வழிந்தது.
"போடா, நோக்குக் கிடையாது. எங்கப்பா எனக்குத் தான் வாங்கிண்டு வவ்வா..."-அபிதா புருவங்கள் நெரிந்தன. அவனை அடிக்கப் போய்விட்டாள். சித்திரம் கசங்கினாற்போல், அவள் முகம் சட்டென மாறிவிட்டது.
"குழந்தைகளா, சண்டை போடாதேங்கோ, இந்தாங்கோ அப்பா வரவரைக்கும் ஆனுக்கொரு சாக்லேட்."
புவனா வாங்கிக்கொண்டாள்.
முரளிக்கு அவசரம் தாங்கவில்லை; வாங்கினதும் வாங்காததுமாக, மேல் ஜிகினாவைப் பிரித்து வாயில் திணித்துக்கொண்டு, சுவாதீனமாக அவர்மேல் உராய்ந்தான்.
அபிதா, கையை நீட்டிவிட்டு, பிறகு தயக்கத்துடன் பின் வாங்கிக்கொண்டாள்.
"என்ன யோசனை?"