பக்கம்:அவள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"'பின்னே என்ன, நீ மட்டும் உத்யோகத்துக்குப் போக வில்லை. நானும்தான் வேலை பார்க்கிறேன்-"

தெருவில் ஒன்றும் இரண்டுமாக, வாழைத்தண்டு விளக்குகள் எட்ட எட்ட ஏற்றிக்கொண்டன.

"மல்லி! மல்லி!"-தெருவில் ஒருவன் கையில் மூங்கில் தட்டுடன் அறைகூவிக்கொண்டு போனான்.

கோபுர விளக்கு, பெரிய குங்குமப் பொட்டுப்போல் பிரகாசித்தது.

கிரிஜா, கூஜாவையும் தம்ளரையும் நடுவில் வைத்துவிட்டுப் போனாள். நல்ல தேய்ப்பு. பாத்திரங்கள் பளிச்சிட்டன.

கிழவர், அடுத்தடுத்து இரண்டு தம்ளர் குடித்தார்.

"ஜலம் கடுக்குமே!"-அவனுக்கு வாய் கடுத்தது. "இந்த வட்டாரத்திலேயே தண்ணிர் சுகமில்லை."

"அவள் கொடுத்தது."

"அவளா? எவள்?"

கிழவர் பதில் பேசவில்லை. அவர் சிரம் லேசாய் கோபுர விளக்கை நோக்கிச் சாய்ந்தது. சொல்லிவைத்தாற்போல் மணிஓசை ஒருமுறை வீச்சிட்டது.

"ஓ" தன் அசடை மறைக்க எழுந்து வாசல் விளக்கைப் போட்டான்.

அரையில் ஒற்றை வேட்டி. மேலே ஒரு ஒற்றை வேட்டி. வேறு உடமைகள், கைப் பை இருப்பதாகத் தெரியவில்லை.

புவனா, சொம்புடன் உள்ளே சென்றாள்.

ரயில் நிலையத்திலிருந்து மின்சார வண்டி கிளம்புகிறது! அதன் தாளம் வெகுதூரம் கேட்டு எட்ட எட்ட ஓயுமுன் எதிர் வண்டியின் சப்தம் நெருங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/151&oldid=1497046" இலிருந்து மீள்விக்கப்பட்டது