பக்கம்:அவள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 லா. ச. ராமாமிருதம்


அபிதா, உள்ளிருந்து வாய்க்கும் கைக்கும் ஜாங்கிரியுடன் வருகிறாள். சுவாதீனமாகப் பெரியவர் மடியில் உட்கார்ந்து கொண்டு, சட்டென்று திரும்பி, அவர் வாயில் ஒரு ஜாங்கிரிக் கொம்பை-சின்னதுதான்-திணிக்கிறாள். அவர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அவள் தகப்பனார் அவளை வியப்புடன் நோக்குகிறான். அபிதா அப்படி சட்டென ஒட்டிக்கொள்ளும் பேர்வழி அல்ல. அவளே கொஞ்சம் லேடி.

“தாத்தா நான் ஜாங்கிரி தந்தேனோன்னோ, நீ சாக்கலேட் தா!"

"உம், என்ன சொல்லணும்? பெரியவாளை நீ என்கிறதா?'-அவள் அப்பன் பல்லைக் கடிக்கிறான்.

"இருக்கட்டும். நாம் எல்லோரும் அவள் குழந்தைகள்".

புவனா உள்ளிருந்து இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள். பெரியவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ஒரு முழங்கு உள்ளே போன பிறகுதான் அவனுக்கு உலகம் ரமித்தது.

"ஜி. ரொம்ப தாங்க்ஸ்,"

"அதிலே ஒண்ணும் குறைச்சலில்லே."

"ஸார், பழக்கமில்லாதவர்கள்-கொடுத்து வைத்தவர்கள். எனக்கு மண்டையிடி பிராணன் போயிடுத்து."

"நானும் ஒரு காலத்தில் முடாக்குடியனாக இருந்தேன்."

"அப்போ ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?"

"வழிப்போக்கனுக்கு பழக்கங்கள் கட்டுப்படியாகாது" ஒருநாளைக்கு ஒன்று கிடைக்கும்; ஒருநாள் கிடைக்காது. ஒருநாள் வசதியிருக்கும்; ஒருநாள் இருக்காது. வழிப் போக்கன், பழக்கங்ளுக்கு லாயக்கில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/152&oldid=1497048" இலிருந்து மீள்விக்கப்பட்டது