பக்கம்:அவள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 வா. ச. ராமாமிருதம்


அவனுக்கு நா எழவில்லை. தெருவில் வாழைத்தண்டு விளக்கு ஒன்று சொடசொடத்தது. ஏதோ கோளாறு, நாக்குத் திரும்பியதும், "வேட்டியை அவிழ்த்துப் போடுங்கள், உடுத்திக்க வேறு தரேன். அவளை அலசச் சொல்றேன்.”

  • நானே அலசிக்கிறேன். கிணற்றடியைக் காண்பித்தால் போதும்.”

அவரைப் புழைக்கடையில் கொண்டுபோய் விட்டு விட்டு, சமையலறையுள் நுழைந்தான். அடுப்பில், ரசம் காய்ந்து கமாளித்துக்கொண்டிருந்தது. அவள் ஏதோ யோசனையில் ரஸம் தளைப்பதைப் பார்த்தவண்ணம் நின்றாள்.

அவன், அவள் முதுகைத் தடவினான். "என்னதான் சொல்லு, உனக்குக் கை வாஸனை இருக்கு-"

சண்டை பாட்டுக்குச் சண்டை; சமாதானம்பாட்டுக்குச் சமாதானம். குடும்பமே வரவர, வயிறு அலம்ப ஒரு கூட்டு ஏற்பாடாப் போச்சு. பால் கணக்கு, அரிசி விலை, எண்ணெய்ச் செலவு உங்களது. மார்க்கெட், சோப்பு சீப்பு, ஸ்நோ பவுடர் என்னது. இந்த மாதம் நெய் கிடையாது. நெய் நேத்திரவாயு. குடும்பமா இது: ஆயினும், ஏதேனும் பொய் உற்சாகங்களை மூட்டிக் கொண்டு இன்று போச்சா? நாளை வருகிறதா?

"விருந்தாளிக்கு என்ன பண்ணிப் போடறே?"!

"விருந்தாளியா? அவர் சாப்பிடப் போறாரா என்ன?”

"ஏன், அவரை வாசலில் உட்கார வைத்துவிட்டு, என்னைக் கூடத்தில் சாப்பிடச் சொல்கிறாயா?"

"ஏன், அவர் இன்னும் போகவில்லை?"

"உன் பெண்தான் அவரைப் போகவொட்டாமல் அவர் மடியில் காரியம் பண்ணிவிட்டாளே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/154&oldid=1497050" இலிருந்து மீள்விக்கப்பட்டது