ஜனனி 139
ஆகவே ஜனனி, இன்னதென்று விளங்காத மனக்கனத்துடனும் வீறாப்புடனும் குளத்தண்டை போய், தன்னையும் அறியாமல், தன்னைத்தானே தேடுகிறாள். ஆனால் அங்கு என்ன இருக்கிறது? ஆழந்தான் இருக்கிறது.
சட்டையும் பாவாடையுமாய் ஜனனி, கையோடு கை கோத்துக்கொண்டு, குளத்தங்கரைப் படிக்கட்டில் திகைத்து நிற்கிறாள்.
திடீரென அவளுள் தாங்கமுடியாத ஆங்காரம் மூண்டது வீட்டுக்கு விரைந்தாள். அம்மாள் சமையலறையில் வேலையாயிருந்தாளோ என்னவோ; ஐயரைக் கான வில்லை. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, ஏதாவது ஒன்றைச் சுற்றுமுற்றும் தேடினாள். கூடத்தில், குழந்தை கைவிரித்தபடி குப்புறப் படுத்துத் துரங்கிக்கொண்டிருந் தான். அவனிடம் பல்லைக் கடித்துக்கொண்டு, கண்களில் பொறி பறக்க, இரு கைகளையும் நீட்டிக்கொண்டு சபித்தாள்.
'உன்னை வைசூரி வாரிண்டு போக!”
கூட விளையாடும் குட்டிகள், ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதைக் கண்டதில்லையா? குழந்தைக்குத் தூக்கத்தில் உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கையைக் காலை உதைத்துக்கொண்டு அலற ஆரம்பித்துவிட்டான்.
அடிவயிற்றிலிருந்து வந்த அந்த உள்ளக் கொதிப்பு வீண் போகுமா? பையனுக்கு மூன்று நாள் ஜூரம் மழுவாய்க் காய்ந்தது. பிறகு ஒன்று, இரண்டு, பத்து என்று உடம்பெல்லாம் பெரிய முத்துக்கள் வாரியிறைத்து விட்டன. ஊசி குத்த இடமில்லை. குழந்தை தன் நினைவற்று, போட்டது போட்டபடியே கிடக்கிறான். ஸன்னமாய் இழையும் அனல் மூச்சுத்தான் இன்னமும் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை உணர்த்துகிறது.