140 லா. ச. ராமாமிருதம்
தாய் மூலையில் புரண்டு புரண்டு அழுகிறாள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, அவளைத் தேற்ற முயலும் உற்றார் உறவினர்களுக்கிடையில் அவளே தனிக்காட்சி ஆகிவிட்டாள். ஜயர் ரேழியில் முன்னும் பின்னுமாய் உலாவிக் கொண்டிருக்கிறார். முன்பைவிட உடல் மெலிந்து, கூன் விழுந்திருக்கிறது. அம்பாள் கொடுத்தாள்; அம்பாள் எடுத்துக்கொள்கிறாள்' என்று ஞானம் சமாதானம் சொன்னாலும், பாசம் பசி தீர்ந்து விடுமா?
ஜனனி படுக்கையண்டை, சுட்டுவிரலை வாயில் சப்பிக்கொண்டு, அச்சத்துடன் நிற்கிறாள். அவள் கோபம் அப்போதே பறந்துவிட்டதால், அதன் விளைவாகிய சாபத்தை மாத்திரம் தனியாய்ப் பார்க்கையில், இப்போது பயமாக இருந்தது. அம்பிக்கு இப்படி நேரும் என்று அவள் என்ன கண்டாள்? அம்பிமேல் அவளுக்கு உயிர் இல்லையா? தாயோடு இல்லாத சமயத்தில் தன்னோடு தானே இருப்பான்? இப்படி அவன் கிடப்பதைச் சகிக்க முடிகிறதா? யாரிடம் போய்த் தன் மனக்கஷ்டத்தைச் சொல்லிக்கொள்ள முடியும்? சுவாமியிடந்தான். அப்படித் தானே தாத்தா அவளிடம் சொல்லியிருக்கிறார்-ராத்திரி தூங்குவதற்கு முன்னால், கதை கதையாய், பாட்டாய், தோத்திரமாய்...
பூஜையறைக்குப் போய், விளக்கை ஏற்றி வைத்து, துக்கம் அடைக்கும் தொண்டையுடன், ஆண்பிள்ளை போல் அவள் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிக்கிறாள்.
'சுவாமி!-’ "
ஜனனீ! என்ன காரியம் செய்தாய்! குழந்தைக்குப் பிராப்தம் இல்லாதவளுக்குக் குழந்தையைக் கொடுத்தாய். பிறகு அதை விளங்கவொட்டாமல், நீயே பிடுங்கிக்கொள்கிறாய்! நீ சக்தி' என்றால், உன் மனம் கூத்து என்ற எண்ணமா?