பக்கம்:அவள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 லா. ச. ராமாமிருதம்



அம்மாளோ, தன்னுடன் வம்படிக்க வருவோரிடம், தன் கன்னத்தைத் தானே இழைத்துக்கொண்டு முறையிட்டுக் கொண்டாள்.

'நல்ல நாளிலேயே சொல்ல வேண்டாம், அவர் செல்லம்! ஆனால் அப்பவாவது கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கட்டியாண்டு வந்தேன். "ஐயேடி! அந்தாத்துப் பொண்ணா, அங்கே நிக்கறதடி, இங்கே நிக்கறதடி, அவாளோடெ பேசித்து, இவாளோடெ பேசித்து"ன்னு, நாலுபேர் வாயிலே புகுந்து புறப்படாமெ, ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கண்டிச்சு வந்தேன். ஆனால் கல்யாணம் ஆணப்புறம் இவளுக்கு வந்திருக்கிற இறுமாப்புக்குக் கேக்கனுமா? 'புருஷாளுக்கு அரைக் காசுன்னாலும் உத்தியோகம், பொம்மனாட்டிக்கு அம்பது வயசானாலும் புருஷன்'னு சும்மாவா சொன்னா? மஞ்சக் கயிறுன்னு ஒண்னு கழுத்திலே ஏறிட்டாப் போறும். புருஷன் மேலே பழியைப் போட்டுட்டு என்ன அக்ரமம் வேனுமானாலும் அவாள் பண்ணலாமே. நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட நாளா இது, மாமி!'

அம்மாள் மற்றவரிடம் விதவிதமாய்ச் சிங்காரச் சொல் வைத்து முறையிடுவதைக் கேட்டுக்கொண்டு, ஐயர் ஒவ்வொரு நாள் வந்துவிடுவார். ‘ஏண்டி கரிக்கிறே குழந்தையை? உன் கண் சுட்டெரிப்புக்காவது அவள் அகமுடையான் அவளைக் கூட்டிக்கொண்டு டோக மாட்டானா?”

அவ்வளவுதான். இடுப்புக் குடத்தைப் பொத்தென ஜலம் தளும்பித் தெளிக்கக் கீழே வைத்துவிட்டு, முன்றானையை வரிந்து கட்டிக்கொண்டு, காற்றைக் கையால் துழாவிக்கொண்டு, அம்மாள் சண்டைக்கு வந்து விடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/190&oldid=1496958" இலிருந்து மீள்விக்கப்பட்டது