பக்கம்:அவள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 லா. ச. ராமாமிருதம்



தோள் குழிவுக்கு அடியில், ரவிக்கை இரு பாதிகளும் ஒட்டிய இடத்தில், உடல் வளர்ச்சியையே தாங்க முடியாமல், தையல் தாராளமாய் விட்டிருந்தது. வெயில் படாத அவ்விடத்துச் சதை தனி வெண்மையுடன் பிரகாசித்தது.

ஜனனி மனத்தில் தனிப் பயங்கரம் திடீரெனக் கண்டது. அப்படியே புடைவையை வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்கு ஒட்டம் பிடித்தாள். அவள் உடலெல்லாம் வெடவெடத்தது.

அன்று முழுவதும் மனம் சரியாயில்லை. ஆயினும் தான் படுவது இன்னதெனத் தெரியவில்லை. அதனாலேயே வேதனை அதிகரித்தது. முதல் முதலாய் ஜனனி தனக்குத் தானே புரியாத சிந்தனையில் ஆழ்ந்தாள். இரவு படுத்தும் வெகு நேரம் துளக்கம் வரவில்லை.

-நள்ளிரவில், ஜனனி திடுக்கென விழித்துக் கொண்டாள். உடலில் மறுபடியும் பயங்கரமான புல்லரிப்பு. அவளையும் மீறியதோர் சக்தி வசப்பட்டவளாய்க் கட்டிலினின்று எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள்.

முழு நிலவின் மேல் கருமேகங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன.

தெருவில் வீட்டு வாசற்படியெதிரில் ஒர் உருவம் நின்றது. வெள்ளைத்துணி போர்த்து, நெட்டையாய், கைகளை மார் மேல் கட்டி நின்றுகொண்டிருந்தது. சத்தமும் நடமாட்டமும் நின்று நீண்டுபோன தெருவில், தனியாய், ஏதோ, எதனுடைய சின்னமோ மாதிரி...முகம் அவள் ஜன்னல் பக்கம் திரும்பியிருந்தது. குளத்தில் கண்டவன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/192&oldid=1496951" இலிருந்து மீள்விக்கப்பட்டது