ஜனனி 149
ஜன்னலிலிருந்து ஜனனி சட்டெனப் பின்வாங்கினாள். இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவனபோல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா? முழுக்க முழுக்கப் பயந்தானா? புரியவில்லை. சமாளித்துக் கொண்டு, சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக்கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக்கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதேசமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடுரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப்போல் தலை நீட்டுகையில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே சுருங்கிற்று.
இப்படி ஒன்றாய் இருந்துகொண்டே இரண்டாய் வெட்டப்பட்டுத் துடிக்கும் வலி பொறுக்கக்கூடியதாயில்லை.
சத்தம் போடாமல், பூஜையறையைத் திறந்தாள். தீப்பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடிப் பிடித்துக் குத்து விளக்கை ஏற்றினாள். திரியினின்று குதித்தெழுந்த சுடரில், அவள் படும் சஞ்சலத்துக்கு ஆறுதலைத் தேடி நின்றாள்.
ஆனால் அவள் தேடிய தெளிவு மனத்தில் ஏற்படவில்லை. எல்லாம் தெரிந்த இறைவன் முன்போலிராது, ஒன்றுமே தெரியாதவன்போல்தான் இருந்தான். இதுவரை தன்னை மறந்துவிட்டு இப்பொழுதுதான் தேடி வந்தாள் என்ற கோபமா? இரவில் எல்லோருக்கும் உள்ள தூக்கம் தனக்கும் உண்டென, கடரில் இல்லாமல் தூங்கப்போய் விட்டானா?