150 லா. ச. ராமாமிருதம்
அழுத்தும் உணர்ச்சிகளின் புதுமையினாலும் வருத்தத்தினாலும் ஜனனி குழம்பி நின்றாள். அவளைத் தாக்கும் புதுமைக்குள்ளேயே உணர்ச்சிகளின் பழமை புகுந்து கொண்டு அவளைக் கேலி செய்தன.
'நீங்கள் யார்? என்னை விட்டுப் போய்விடுங்களேன்!”
"நாங்கள் யார்? எங்கே போக வேண்டும்? எங்கிருந்தாவது வந்தோமா, எங்கேயாவது போக? உன்னுள்ளேயே தானே வளர்ந்தோம்? உன்னுள்ளேயே தானே 'கண்ணா மூச்சி விளையாடுகிறோம்? கண்டு பிடியேன்! கண்டுபிடிக்கத்தானே வந்தாய்? உனக்கும் எங்களுக்கும் இன்றைப் போட்டியா, நேற்றையப் போட்டியா? கண்டு பிடியேன்! கண்டுபிடி பிடி பிடி ஹோ ஹோ ஹோ!' அவைகளின் சப்தமற்ற கொக்கரிப்பு தாங்கக்கூடியதா? ஜனனி தடாலென்று குப்புற விழுந்து விக்கி விக்கி அழுதாள். மார்பே வெடித்துவிடும் போலிருந்தது.
அன்று முதல் அவள் துடிப்பும் கலகலப்பும் வெளி நடமாட்டமும் அடங்கிப்போயின. அறையிலேயே மணிக்கணக்கில் சேர்ந்தாற்போல் மோவாய்க் கட்டையைக் கையில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். பக்கத்தில் வந்து கூப்பிட்டாலும் காது கேட்பதில்லை. கேட்டு வாங்கி அடைத்துப் புடைத்துச் சாப்பிடும் ஜனனிக்கு இப்பொழுது கூப்பிட்டு உட்காரவைத்துக் கொட்டினாலுங்கூட இறங்கவில்லை.
திடீரென இளைக்க ஆரம்பித்தாள். 'இதென்னடீம்மா கூத்து, திடீரென்று இவளுக்கு வந்திருக்கிற வினை! ஊமை ஊரைக் கெடுத்ததாம்னு-!'
ஜனனியின் கண்கள் நிறைந்து கண்ணீர் கன்னம் புரண்டு ஒடும். ஆனால் துடைக்கக்கூட முயலுவதில்லை.