ஜனனி 151
உட்கார்ந்த நிலைகூட மாறுவதில்லை. அவளுள் ஏதோ தகர்ந்துவிட்டது.
'அடி பாவி குழைந்தையை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்காதேடி! ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள், புருஷனிடம் இன்னும் போகவில்லையே என்று இருக்காதா?’’
***
ஜனனியின் புருஷனைப்பற்றி ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாய் வதந்தி உலவியது.
இருந்த இடத்தில்தான் இருக்கிறான்-சகவாச தோஷம்-கண்ட இடத்தில் கண்டபேரோடு சுற்றுகிறான். குடி கூத்தி, புகை-இல்லாத பழக்கங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. இருக்கிறது இல்லாதது எல்லாம் சேர்ந்து நாலுபேர் வாயில் மாறி மாறி வந்து காதில் விழுகையில் கிழவரின் கிலேசம் சொல்லத்தரமல்ல. 'இதென்ன, தள்ளாத வயதில் உளையில் மாட்டிக் கொண்டோமே!’ எனத் தவிப்பார். இதே நிலையில் தான் காலமாய்விட்டால் ஜனனியின் கதி என்ன? நமக்கு வாய்த்தவளோ தாடகையாக இருக்கிறாளே! என்று ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளலாமெனில் பூஜையறையில் அவருக்கு முன்னால் ஜனனி உட்கார்ந்திருப்பதைக் கண்டு, உள்ளே போகவும் அஞ்சிப் பின்னடைவார்
மாலையில் சமையலறையிலிருந்து அம்மாள் இரைவாள்; வீட்டுக் காரியங்கள் போட்டது போட்டபடிக் கிடக்கு. பூஜையில் ஒக்காந்துண்டு சாமியை வேரோடு பிடுங்கினால் ஆயிடுத்தா? புருஷன் போட்டோவுக்குப் பூவைச் சூட்டி அந்தரங்க மனசோடு ரெண்டு நமஸ்காரம் பண்ணினாலாவது லாபமுண்டு!"