ஜனனி 153
அம்மாளுக்கு எரிச்சலாய் வந்தது. 'இவள் சமாசாரம் என்னிக்குத்தான் புரிஞ்சுது? ஆம்படையான் வரான்னா, இடிச்சபுளி மாதிரியா இருக்கு இது மனுஷ ஜன்மந்தானா?”
ஐயர் சாந்தி மூசுர்த்தத்தை தாலி முகூர்த்தம் மாதிரி தான் சப்பிரமமாய்க் கொண்டாடினார். அம்மாள் கூட இந்த தடவை அவ்வளவு எரிச்சலாய் இல்லை.
மாப்பிள்ளைப் பையன், மணப்பாயில் மணமகள் அருகில் உட்கார்ந்திருக்கையில் இன்னமும் அதிகமான சோபையோடு திகழ்ந்தான். முன் மண்டையில் மயிர் முன்பார்த்ததைவிட அதிகமாய்க் கொட்டியிருந்த போதிலும், லேசாய்ப் படர்ந்து வரும் அந்த வழுக்கையும் அழகு வழுக்கையாய்த்தான் இருந்தது. அளவுமீறிய இன்ப நுகர்ச்சியின் வடுக்கள் முகத்தில் விழுந்திருந்தன. ஆனாலும் இன்னமும் அந்த உடலும், அவ்வுடலை அதன் சறுக்குப் பாதையில் விரட்டி ஒட்டிக்கொண்டிருக்குக் நெஞ்சுத் திடமும் இதைவிட அவன் அதிகம் தாங்குவான் என்பதை உணர்த்தின.
அடர்ந்த புருவங்கள் சவுக்குப் புதர்கள் போல் சிலிர்த்துக் கொண்டு விசிறியெழுந்து சந்திக்கும் இடத்தில் இட்டிருந்த சந்தனப் பொட்டு, அதனுள் குங்குமத் திலகம், அசலாய் நெற்றிக் கண்ணையே திறந்து வைத்தாற்போல் முகத்துக்கு ஒர் உக்கிரமான அழகைக் கொடுத்தன. கடைக்கண் பார்வையில் சிந்திய வெற்றி, அங்கே குழுமியிருந்த பெண்களைக் கொள்ளை கொண்டது.
ஜனனி மணவறையில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.