பக்கம்:அவள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 லா. ச. ராமாமிருதம்



வெளியில் நிறைந்த இருளினின்று உருவாகிஉருவங்கள் எழுந்தன. ஒன்று, இரண்டு, நூறு, ஆயிரம்-இத்தனை நாட்கள் உள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டிருந்த ஆத்திரத்தின் நிழல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு தனியுருக்கொண்டு அவள் கண்முன் விரித்தாடியது.

'ஜனனி, அடையாளம் தெரிகிறதா? அன்றைக்கு: எங்களை நீ மறக்க விட்டுவிடுவோமா? இன்னமும் நாங்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லையே? சே, என்ன இவ்வளவு அசடாக இருக்கிறாய்? தொட்ட பிசுக்கு, விட்ட பிசுக்கு, கிட்டப் பிசுக்கு, ஜன்மப் பிசுக்கு இதெல்லாம் நீ கேள்விப்பட்டதில்லையா? எங்களுக்குத் தலை கிடையாது. உயிருண்டு; நாங்கள் கபந்தங்கள். ஆடுவோம், பாடுவோம், சிரிப்போம், அழுவ்ோம், அழிவோம், அழிய மாட்டோம்-’’

ஜனனிக்கு நெற்றிப் பொட்டில் வேர்வை அரும்பியது.

'பயமாயிருக்கிறதா? பயப்படாதேம்மா! பயப்படாதே கண்னு நாங்கள் இத்தனைபேர்கள் இருக்கிறோமே, எதுக்குப் பயம்?' -

"ஜனனீ!'

தோளில் கை பட்டு, ஜனனி திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் கணவன் புன்னகை புரிந்தவண்ணம் நின்று கொண்டிருந்தான் ,

'என்ன பயந்துவிட்டாய்? என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா?”

ஜனனிக்கு மண்டை எரிந்தது, அவனை அவள் மெளனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஜன்னலின் வெளியில் அவள் கண்ட பேயுருவங்கள், உள்ளே பறந்து வந்து சிரித்துக்கொண்டே அவள் உள்ளே புகுவதை உணர்ந்தாள். ஜலத்தைக் குடித்து உப்பும் நெட்டிபோல், தனக்குத்தான் பெரிதாகிக்கொண்டு வருவதுபோன்ற ஒரு பயங்கர உணர்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/198&oldid=1496578" இலிருந்து மீள்விக்கப்பட்டது