பக்கம்:அவள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனனி 155

அவள் உருவம் பெரிதாக ஆக, அவன் உருவம் அவளுக்குச் சுருங்கிக்கொண்டே வந்தது. போகப் போக அவன் புழுப்போலாகி, அவன் சிரிப்பும், அங்க அசைவுகளும் புழுவின் நெளிவைப்போல், அவளுள் பெரும் சீற்றத்தையும் அருவருப்பையும் எழுப்பின. அவளுள் அடைந்த பல்லாயிரம் பேய்களும் ஒரே பேயாய்த் திரள ஆரம்பித்தன.

'என்ன அப்படிப் பார்க்கிறாய்! கோபமா? நியாயந்தான், உனக்கு உன் நியாயம், எனக்கு என் நியாயம். இப்பொழுது சரியாய்ப் போய்விட்டதோன்னோ? சிந்திப் போனதைச் சிந்திக்காதே! இன்னமும் நான் எவ்வளவோ போயிருக்கிறேன், வந்திருக்கிறேன். வா, வா, பெண்களுக்குக் கோபம் அழகாய்த்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் கோபம், புருஷர்களுடைய பொறுமைக்கு அடங்கியிருக்கும் வரைதான் அழகு. மீறினால் பேய்தான்!”

அவள் உள் திரண்டுகொண்டு இருக்கும் உருவிற்கு அவள் கணவனின் வார்த்தைகளே உயிர்ப்பொறி வைத்ததும், ஜனனி உடல் குலுங்கியது.

அவள்மேல் அவன் கைகள் விழுந்தன. அவளை ஒரே வீச்சில் வாரி மார்போடு மார்பாய் இறுக அணைத்தன. அவனுடைய முரட்டுத்தனத்தில் அவள் மார்பில், தாலிப்பல் அழுந்தியது.

ஜனனி திணறினாள். அவளுள் திரண்ட பூதம் அவனை ஒரு விசிறு விசிறியது. தள்ளிய வேகத்தில் கால் தடுக்கிப் பின்னுக்கே போய்க் கீழே விழுந்தான். இரும்புக் கட்டிற்கால் முடிச்சில் பின் மண்டை மடே'ரென மோதியது.

அடிவேகத்தில் அவன் கத்தக்கூட இல்லை. ஜனனி!" என மெதுவாய் முனகினான். அப்படியே தலை தொங்கி விட்டது. முக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் குபு குபுத்தது. ஜனனி திக்பிரமை பிடித்து நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/199&oldid=1496576" இலிருந்து மீள்விக்கப்பட்டது