160 லா. ச. ராமாமிருதம்
இப்படித் தனக்குத்தானே கையை நீட்டி நீட்டி மிகவும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள். எப்போதும் சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணமே இருப்பாள்.
கடைசியில் விடுதலையானாள். உடம்பு தேவலையாயிற்று என்று அல்ல; அவளால் இனிமேல் ஆபத்தில்லை, இம்சை பண்ணாத பைத்யமென்று,
அவளுக்குச் சாப்பாட்டுக்குக் குறைவில்லை. ஏனெனில் அவளுக்குப் பிக்ஷையிட்ட வீடுகள் அத்தனையும் திடீரெனச் செழித்தன. அவள் கை நீட்டி வேண்டுமென்று கேட்டோ அல்லது தானாகவே ஏதேனும் சாமானை எடுத்துக் கொண்ட கடைக்கு அன்று வியாபாரம் மும்முரமாய் நடக்கும். ஆகையால் அவளுக்கு அன்னமிடவும், கேட்டதை, கேளாததைக் கொடுக்கவும் நான், நான்' என்று ஒருவரையொருவர் முந்திக் கொண்டனர். அவள் கையால் ஒருமுறை உடலைத் தடவினால் போதும்; தீராத நோய்கள், அவ்வுடலிலிருந்து பொட்டென உதிர்ந்து போகும்.
இருந்தாலும் பைத்தியம்...!!
இப்படியே ஜனனி வெகுகாலம் தொண்டு கிழமாக ஜீவித்திருந்தாள். உடல் சுருங்கி, பல் உதிர்ந்து, தலைமயிர் வெண்பட்டாய் மின்ன...
அப்புறம் ஒரு நாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான்ன வேளையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். மத்தியானம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலை ஆயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாய்ப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் அவள் எழுந்திருக்கவேயில்லை.