xxi
பெரிய விஷயங்களின் சின்னங்களாய்க் காணல், அதன் வழி ஐக்யபாவம், உள்ள நெகிழ்ச்சி, மெளனம்--இவை, இவை போன்ற தன்மைகள், அழகுகள், இயல்பாகவே வாய்த்திருந்தாலும் சரி, விசுவாசத்துடன் பயின்றாலும் சரி, இவை தெய்விகத்தின் சாயல்கள், அவளுடைய வாஸங்கள், அவள் வருவாள், வருகிறாள், வந்து கொண்டேயிருக்கிறாளின் முன் குறிகள், இந்தப் பரிமளங்களை நுகரக் கொடுத்து வைத்திருப்பது அவரவர் பூத்ததற்குத் தக்கபடி.
இன்னும் வரவில்லையா? இன்றில்லையேல் நாளை. நாளைக்குத்தான் வரை கிடையாதே,தெரியுமோல்லியோ?
அட அசடே, நேற்று ஏது, நாளை ஏது, என்றும் இன்றுதான். அவள் உன் பின்னால் நின்று கொண்டிருக்கிறாள். அவள் மூச்சு உன் தோளில் பட்டுக்கொண்டே தானிருக்கிறது. அவளை நீ அடையாளம் கண்டுகொள்ளக் காத்திருக்கிறாள். அவள் காட்டும் ப்ரபஞ்சக் கண்ணாடியில் எப்போ உன் பிம்பத்துக்குப் பதில் அவள் தெரிகிறாளோ-அப்பவே தருணம் நிகழ்ந்துவிட்டது.
அவள் தருண்யை
தெய்வம் மனுஷ்யரூபேண:
***
கூடத்தில் போட்டிருக்கும் நாற்காலியில் ஏற முயன்று கொண்டிருக்கிறாள்.
நான் அவளைப் பார்ப்பதைப் பார்த்துவிட்டாள்.
தரையில் ஒரு கால், ஒரு கால் நாற்காலி மேல். முகத்தை என் பக்கம் திருப்பி, தலையை ஒரு பக்கமாய்ச் சாய்த்துக்கொண்டு என்னைப் பார்க்கிறாள். ஒரு கண்ணை மறைக்கும் பிரிமயிரினுரடே என்மேல் விழுந்து, கனிவுடன் கபடு கலந்து நெஞ்சை அள்ளும் பார்வை. அருள் பார்வை அவள் பார்வை. ஸாஹஸி.