பக்கம்:அவள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 லா. ச. ராமாமிருதம்



“இது உங்களுக்கு உடம்புக்காகுமா? அவள் சொன்னது செவியில் ஏறியதோ இல்லையோ? தம்புராக் கட்டைமேல் முகத்தைப் பதித்து ஓசையை மூர்க்கமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.

எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்புபோல் அவள்மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை நாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சூழலில் அடித்துக்கொண்டு போவதை உணர்ந்தாள் அந்த மூலமூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு நுனியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணிருள் பேசிய பேச்சுப் போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்றாய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவனாய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப்போனாள்.

'என்ன இது ஏன் இப்படி இருக்கிறது?" 'எப்படி இருக்கிறது?" 'நெஞ்சில் சந்தோஷம் பொங்குகிறது. ஆனால் தொண்டையைத் துக்கம் அடைக்கிறது. கடகடவெனச் சிரிக்க வாய் திறக்கிறது. ஆனால் அழுகை பீரிட்டுக் கொண்டு வருகிறது. இது என்ன? பயமாயும் இருக்கிறது; சந்தோஷமாயும் இருக்கிறது. நாமே இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகங்கூட்த் தோன்றுகிறது. நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/212&oldid=1496367" இலிருந்து மீள்விக்கப்பட்டது