பக்கம்:அவள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 லா. ச. ராமாமிருதம்



"அப்போது நீங்கள் என்பக்கம் திரும்பித் தலை வணங்கினர்கள். மறுபடியும் நான் சிலை அசையக் கண்டேன். எனக்கு நெஞ்சு பரபரத்தது. எப்படியும் நீங்கள் ஆச்சரியமான நிமிஷங்கள் படைத்தவர்.'

'தாக்ஷாயணி, நாம் இப்போது நிமிஷத்தின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக்கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.'

அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. நெஞ்சை அடைத்தது. அவன் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டாள். வார்த்தைகள் மூச்சோடு சேர்ந்து வந்தன. “எப்படி உங்களால் இப்படிப் பேச முடிகிறது?’

அவன் பெருமூச்செறிந்தான். இருவரும் மெளனமாயினர்.

ஆகாயத்தில் பட்சி ஒன்று ஒற்றையாய்ப் பறந்து சென்றது. திசை தப்பிய எண்ணம்போல், நிலவு வெளிச்சத்தில் இரவைத்தான் பகலென்று நினைத்துக் கொண்டதோ? மாலையில் நேரத்தில் கூட்டிலடைய மறந்து இப்பொழுது இரவில் திசை தப்பி அலைகிறதோ? சுருதியிலிருந்து இழைகள் பிரிந்து அவர்களைச் சுற்றியும் மேலும்; மேன்மேலும் கூடு பின்னின.

ரிமா மமாமமாமாமி-’’

அவன் குரல் தம்பூரின் ஓசையோடு ரகசியமாய்க் கலந்து ஸ்ன்னமாய்ப் பிரிந்து மெதுவாய் வீங்கி எழுந்தது.

அவள் கண்ணிர் கரையுடைந்தது. அவன் பாதங்களை இரு கைகளாலும் வருடினாள். தொண்டை கேவிற்று.

'நான் இப்போது எது நினைத்தேனோ அதற்கு அடியெடுத்துக் கொடுக்கிறீர்கள்:

அவன் கண்கள் புன்னகை புரிந்தன. குரல் இசையோடு தழுதழுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/218&oldid=1496383" இலிருந்து மீள்விக்கப்பட்டது