xxii
அவளை வாரி அணைத்துக்கொள்ள எழும் ஆசையை சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன்.
தருணம் கலைந்துவிடும்.
சென்ற வருடம், ஸாஹித்ய அகாதெமி ஆதரவில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் என்னுடைய சிறுகதை ஒன்றைப் படிக்கச் சென்றிருந்தேன். திரும்பி வரும் வழியில் லால்குடியில் இறங்கி பாக்கியாகிவிட்ட சில ப்ரார்த்தனைகளைச் செலுத்த வாய்ப்பு.
இரவு Delux பஸ்ஸில் கிளம்பினோம். ஹைமவதி ஜன்னவருகே, நான் அவள் பக்கத்தில், பின் ஸீட்டில், மகனும் மகளும்.
அம்மாவுக்கும் உங்களுக்கும்தான் ட்ரிப் ஜாலி என்று பின்னாவிருத்து காயத்ரி கிண்டல் பண்ணுகிறாள்.
ப்ரயாணம் என்றுமே எனக்கு அலுத்ததில்லை. ஆனாலும் இளவயதின் உற்சாகம் இப்போ காண முடியுமா?
வயதின் தனிமையை, அலுப்பை நான் ஒப்புக் கொள்ள அஞ்சினாலும் எனக்குக் கட்டாயமாய், வேளைக்கு வேளை, விதவிதமாய் சந்தர்ப்பங்களால் உணர்த்தப்படுகிறது. ஆனால் ஒரு நாளைப்போல, வீட்டில் சேர்ந்தாப்போல் அடைந்து கிடப்பதிலிருந்து சில நாட்களேனும் விடுதலை கிடைக்குமல்லவா? அந்த சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. வேற்று இடங்கள் வேற்று முகங்கள் எனும் மாறுதலில் மனம் லேசாகிறது. Battery recharge ஆகிறது. என்னைப்பற்றி எனக்குப் புது எடைகள் கிடைக்கின்றன. அதனாலேயே மற்றவரைப் பற்றிக் கிடைப்பதும் இன்றியமையாததுதானே! வாழ்க்கையே ஒரு Voyage of Discoveries—and rediscoveries.