பக்கம்:அவள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 181

கோணி ஊசியால் ஓங்கிக் குத்தினாற்போல் என் மண்டையில் வலி பளீரெனப் பாய்ந்து மின்னிற்று. ஒசைகள் அனைத்தும், அவைகளின் கதியில், அப்படியே தடுக்கி நின்றன. கூரையிலிருந்து ஒரு பல்லி தொப்பென்று மூலையில் சாத்திய தம்பூரின் மேல் விழுந்தது. ரொய்ஞ்ஞ் என்று தந்திகளின் சத்தந்தான் அந்த நிமிஷத்தை விடுதலை செய்தது.

"என்ன சொல்கிறீர்கள்? அவர் அப்படிக் கேட்கையில் அவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. என் பெண்ணை நான் காப்பாற்ற வேண்டும். ஒரேயடியாய்ப் புத்தி கலங்கியிருக்கிறாள். ஏதோ பிதற்றிக்கொண்டே யிருக்கிறாள். ஆகாரமே செல்லவில்லை. அவளை நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?"

எனக்குச் சுருக்கென்றது.

மிஸ்டர் பசுபதி, உங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பேன் என்று நினைக்கிறீர்களோ?

"நான் நினைப்பேன் என்று நீங்கள் நினைக்கிறது இருக்கட்டும். நீங்கள் கொடுத்தாலும் நான் பண்ணிக் கொள்ள வேண்டாமா? என் சம்மதம் என்று ஒன்று இதில் உண்டே'

அவருக்கு மூக்குத் துடித்தது. அதிகப் பிரசங்கித்தனமாய்ப் பேச வேண்டாம். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே மீறித்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். நான் வார்த்தை பொறுக்கமாட்டேன்.”

'வாஸ்தவம் நான் யார்? கேவலம் பாட்டுவாத்தியார். நீங்கள் பெரிய உத்தியோகஸ்தர். உம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உமக்கு ஆமாஞ்சாமி போட்டுப் போட்டுப் பிறர் அபிப்பிராயம் என்று ஒன்று உண்டு என்பதையே மறந்துவிட்டீர்கள். உம்மிடத்தில் பணம் ஏராளமாய் இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/225&oldid=1496395" இலிருந்து மீள்விக்கப்பட்டது