பக்கம்:அவள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxiv

அவளுடைய கிராமத்து நினைவுகள் கேட்கக் கேட்க அலுக்கவேயில்லை. வேப்பிலை அடிக்காமலே அவைகளைக் கொட்டுகிறாள். சில விஷயங்களில் அவளுடைய ஞாபகசக்தி அபாரமாயிருக்கிறது. எங்கெங்கோ காலங்களின் மூலைமுடுக்குகளிலிருந்து விஷயங்களை, பெயர்களை எடுக்கிறாள். அந்தச் சம்பவங்களை அவள் சொல்லும்போது அவளைப் பார்க்க, எனக்கு சற்று ஆச்சர்யம், கொஞ்சம் வேடிக்கை, ஒரு தினுசான சந்தேஷமாயிருக்கிறது. கிராமப் பண்பு பற்றி ஒரு தனி வரலாறே எழுதுமளவுக்கு அவளிடம் அத்தனை நினைவுகள், விஷயங்கள் மண்டிக் கிடக்கின்றன என்று இப்போதுதான் அறிகிறேன். அவைகளை ஒரு புத்தகமாய்ப் படுத்த வேளை வர வேணும்.

மற்ற வேளைகளில் அவளுடைய இனங்கெட்ட கோபங்கள், பிடிவாதங்கள், அரித்துப் பிடுங்கியே தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நூறு சத சுயநலம், இவைகளுக்குச் சிரிக்கத் தெரிந்துகொண்டு விட்டால், Hymavathy is really great.

'உங்கள் ரோசத்தை வெச்சுண்டு என்ன பண்றது, காலணாவுக்கு உபயோகம் உண்டா? கை கொட்டிச் சிரிப்பாள். "அது அது வரப்போ சிரிச்சுத் தட்டிக் கழிச்சுண்டு போவேண்டியதுதான். உங்கள் மாதிரி புழுங்கிண்டிருந்தால் ஒரு நாள் கூட வாழ முடியாது. விடு, அது அது அவ்வளவுதான்-இதுதான் என் Policy என்பாள்.

பெருந்திருவுக்குச் சார்த்துவதற்கென்று காயத்திரி தியாகராயநகர் சென்று புடவை வாங்கி வந்தாள். பாலிஸ்டர் அரக்குக் கலரில் ஒன்பது கெஜம். அதைப் பார்த்தவுடன் அவள் அம்மைக்கு ஆசை பிறந்துவிட்டது. "எனக்கும் இது மாதிரியே ஒண்ணு-ஆனால் பணத்துக்கு எங்கே போறது? குடும்பத்தில் ஏகப்பட்ட செலவு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/24&oldid=1495938" இலிருந்து மீள்விக்கப்பட்டது