பக்கம்:அவள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமலி 197

இவாள் போட்ட குப்பை தானே? ஆனால் இந்த மக்குக்கு உடனே உச்சி குளிர்ந்து போறது. காரியமெல்லாம் இவள் தலைமேலே, இவளும் மத்தவாளைச் செய்யவும் விடமாட்டாள்.

பெரியவாளைத் தரிசனம் பண்ணப் போறாளாம். ஏன், அவரைப் பார்க்க அந்தக் காரில் நாங்கள் வர மாட்டோமா, அழைச்சுண்டு போனால்! 'காரிலே புழுக்கம் தாங்காது. அத்தோடு நீங்க பார்க்காத பெரியவாளா? காஞ்சிபுரம் உங்களுக்குக் கொல்லைப் புறம். தாஸு சாமர்த்தியமே, இதிலே நம்பிக்கையில்லே அதிலே நம்பிக்கையில்லேன்னுட்டு, பெரியவாள் மேலே பக்தி பொங்கி வழியறதோ? பட்டுப் புடவை வாங்கப் போறான்கள்.

ரகு ஒரே வாய்ச்சவடால், ஒரு வேலையிலும் நிலைச்சு நிக்கறதாத் தெரியல்லே. வேலையில் இல்லாமலும் இல்லை. ‘'வேலைக்கு நான் தேட வேண்டாம். அது என்னைத் தேடிண்டு வரும். நான் படிச்சிருக்கிற படிப்பு அப்படி!'

மூணாமவன் என்னைக்குமே மூடு சூளை. இப்போ தன் சூளையில் தானே வெந்துண்டிருக்கான். இவாளை அடுத்தடுத்து மேம்படிக்க வச்சு இவள் நகையெல்லாம் ஜாடா முழுகிப்போச்சு, நினைச்சுப் பார்க்கறதுகளா? ஒரு காலனா ஒத்தாசையில்லை, ஒருதடவை கிஸ்திக்குப் பணம் தட்டுப்படறது, உழவு மாடு வாங்கணும்னு கேட்டு எழுதினால் ஒரு மாசம் கழிச்சுப் பதில் வரது, இதுக்குத் தான் நிலத்தை அப்பவே வித்துடச் சொன்னேன்’னு. எல்லாம் பொய்த்துப் போச்சு. இதுகளா விழுதுகள்? கழுத்துக்குச் சுருக்குகள்.

"என்ன நீங்களே பேசிக்கறேள்?"

'பேசினேனா என்ன?’ முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/241&oldid=1496476" இலிருந்து மீள்விக்கப்பட்டது