த்வனி 203
மும்முரமாய், ரயில்வே கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கிறது. இரவும் பகலுமாய் விளக்குப் போட்டுவிடாது நடக்கிறது.
பாலத்தின் அடியில் ஒடும் ஜலத்தையொட்டிக் கரை கட்டினாற்போல் குவித்திருக்கும் பாராங்கற்களின் மீது, பூத்த நக்ஷத்ரம்போல் விரிந்த கைகால்களுடன், தலை கீழாய் அண்ணாந்து ஒருவன் விழுந்து கிடந்தான். குடுமி அவிழ்ந்து, தண்ணீரில் தோய்ந்தது. பின்மண்டையிலிருந்து பீறிட்டுக் கொண்டேயிருக்கும் குருதி, ஜலத்தில் பந்து பந்தாய் சடைத்துச் சொம்பளவு இரத்தப் பூக்கள் முகத்தைச் சூழ்ந்து தவழ்ந்தன. காலை வெய்யிலில் தாடி முட்கள் பொன்னாய் மின்னின. சிற்றலைகள் முகத்தைக் கழுவின.
மூலத் துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கிவிட்ட செஞ்சடாதரன்.-
***
தெருவிளக்கு அனைந்தது தான் காரணமோ என்னவோ, நள்ளிரவில் திடுக்கென விழித்துக்கொண்டேன். என் உருவக்கோடுகூட எனக்கிலாதபடி என்னையும் தன்னோடு இழைத்துக் கொண்டதுபோல் எனைச் சூழ்ந்த மையிருளில் விழித்திரையில் சிவப்பு நுரை கக்கிக்கொண்டு பெருக்கெடுத்து அறை புரண்டது.
சிவப்பை விடச் செந்தூரம் எனில் தகும்.
கைக்குப் பட்டாலன்றி இருக்குமிடம் தெரியாமல் தாதுவில் மிதந்துகொண்டிருந்தால் உயிர்.
'அப்பனே தீர்க்காயுசாயிரு” என்று அயிலாண்டப் பாட்டிகள் வாயார வாழ்த்த வழி.
வெள்ளமாய்ப் புரண்டுவிட்டாலோ;
'போயும் போயும் இப்படியா போகணும் நாலு நாள் கிடந்து போனான்னு வயத்தெரிச்சல் தீரக்கூட