206 லா. ச. ராமாமிருதம்
காலம் முடிச்சவிழ்ப்பு நிச்சயமில்லை. திடீரென்று நேர்வதுதான் சிக்கறுப்பு. விடுதலை, மீட்சியற்றது. விடுதலை திடீரென்றுதான் நேர முடியும்.'
'இப்போ என்ன விடுதலை, எதிலிருந்து விடுதலை?”
'நூல் கட்டிலிருந்து விடுதலை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என மாறி மாறிக் காட்டும் நம்பிக்கையின் போதையினின்று உதறிக்கொண்ட தெளிவு."
எனக்கு ஒன்றுமே புரியவில்லை '
"உங்களுக்கு விளக்குமளவிற்கு என்னுள் இப்போது நேர்ந்ததற்கு இன்னும் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் வரும், ஒரு நாள் வரும். ஆனால் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? நேர்ந்தது நேர்ந்துவிட்டது. விடுதலையின் பாதையே அந்தச் செயல்தான்."
'நீங்கள் பேசற பாஷையே வேறேயா இருக்கு. போனவர்கள் போய்விட்டாலும் இருக்கிறவா சுபிக்ஷமாயிருக்கணும்னு, லோக ஷேமார்த்தம் இந்தக் காரியங்களைச் செய்தாகணும். இதுகளைச் செய்யாட்டா பிதுர்க்களின் சாபம் குடும்பத்திற்கு சம்பவிக்கும்.'
'சாஸ்திரிகளே . உங்கள் கேள்விக்குப் பதில் உங்கவளிடமிருந்தே வந்துகொண்டிருக்கிறது. போனவர், இருப்பவர், ஷேமம், சாபம், லோகம் ஈதெல்லாம் சமுதாய பாஷையின்றி வேறு என்ன? உங்கள் வரை நேற்று இருந்த என் தாய் இன்று போய்விட்டாள் அல்லவா? ஆனால் அதோ சாம்பல் படுக்கையிலிருந்து நம் சர்ச்சையைக் கேட்டு அவள் சிரிக்கும் சிரிப்பின் த்வனி எனக்குக் கேட்கிறது. உங்களுக்குக் கேட்கிறதோ? அதுதான் நான் உங்களுக்குச் சொல்லத் தவிக்கும் விஷயம்.'
'இதோ பாருங்கள், பூணூலைக் காணோம்னா அதற்குப் பரிகாரம் இருக்கு. பெரியவா எல்லாத்துக்குமே பரிகாரம், பிராயசித்தம் ஏற்படுத்திட்டுப் போயிருக்கா-- அதனாலே...'